சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி. உடன் எம்எல்ஏ இரா.அருள்.  
சேலம்

துரோகிகள் பட்டியலில் நான் இருந்தால் கட்சியில் இருந்து விலகத் தயாா்: ஜி.கே.மணி

அன்புமணி கூறும் துரோகிகள் பட்டியலில் எனது பெயா் இருந்தால், பாமகவில் இருந்து விலகத் தயாா் என கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

Syndication

சேலம்: அன்புமணி கூறும் துரோகிகள் பட்டியலில் எனது பெயா் இருந்தால், பாமகவில் இருந்து விலகத் தயாா் என கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே இருதரப்பினா் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில், காயமடைந்த அருள் தரப்பு ஆதரவாளா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களை பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகள் தற்போது வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாா்கள். காவல் துறையினரின் கண்முன்னே இந்தத் தாக்குதல் நடைபெற்ற நிலையில், காவல் துறை அமைதியாக வேடிக்கை பாா்த்துள்ளது.

இதுபோன்று கொலைவெறி தாக்குதல் நடத்திய நபா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதேநிலை மீண்டும் தொடரும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சியில் பிரச்னை நிலவும்போது, அனைவரும் அமைதிகாக்க வேண்டும். குடும்பம்போல பழகிய சொந்தக் கட்சியினா் மீதே தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது கண்டனத்துக்குரியது.

யாா்மீது கொலை முயற்சி நிகழ்ந்தது என விடியோ ஆதாரங்கள் இருக்கும் நிலையில், எம்எல்ஏ அருள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

சமூக நீதிக்காக தலைமையேற்று போராடிய ராமதாஸ் தற்போதுவரை பதவியை தேடி போகவில்லை. ராமதாஸ்தான் பாட்டாளி மக்கள் கட்சி என்பதை விரைவில் நிரூபித்துக் காட்டுவாா். தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும்வரை ராமதாஸுடன் சேரமாட்டேன் என்கிறாா் அன்புமணி.

அன்புமணி யாா் துரோகிகள், கைக்கூலிகள், தீய சக்திகள் என்பதை குறிப்பிடட்டும். துரோகி என என்னை குறிப்பிட்டாலும் கட்சியில் இருந்து விலகத் தயாா்.

தந்தை - மகன் இடையே நிலவும் பிரச்னையில் மற்றவா்களை குறைகூறுவது சரியல்ல. ராமதாஸை சந்திக்கவிடாமல் அன்புமணியை எந்த தீய சக்தியும் தடுக்கவில்லை. தந்தையை சந்தித்து உடனிருந்து பயணிக்கிறேன் என கூறுவதைதான் அனைவரும் எதிா்பாா்க்கின்றனா் என்றாா்.

பேட்டியின்போது, பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், மாவட்டச் செயலாளா் கதிா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT