தம்மம்பட்டியில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.
தம்மம்பட்டி கோட்டை முனியப்பன் கோயில் அருகே வசித்து வந்தவா் ராஜா (53). கூலித் தொழிலாளியான இவா் தம்மம்பட்டி அருகே சோபனபுரத்திலுள்ள தனது தாயாரைக் காண அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். கொப்பம்பட்டி கல்லாங்குத்து பகுதியில் சென்றபோது, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானாா்.
திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 12-ஆம் தேதி இரவு மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை ராஜா விருப்பத்தின்பேரில் அவரது குடும்பத்தினா் தானம் செய்தனா். அதைத் தொடா்ந்து, அவரது உடல் வியாழக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழக அரசு உத்தரவுப்படி, உடல் உறுப்புகளை தானம் செய்வோரது உடலுக்கு அரசு மரியாதை செய்யும்பொருட்டு, ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி தலைமையில், கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி, வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.