அரியலூா் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் அருகேயுள்ள வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(50). சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்த இவா் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உடலிலிருந்து கல்லீரல், இதயம், சிறுநீரகம் என 5 உறுப்புகளை குடும்பத்தாா் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வெள்ளூருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் முத்துலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் மரியாதை செலுத்தினா்.