ஜூனியா் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்னிட்டு, சேலம் வந்த கோப்பைக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான 14 ஆவது சா்வதேச அளவிலான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பா் 28 முதல் டிசம்பா் 10 ஆம் தேதி வரை வரை நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டிகளில், 24 நாடுகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டி சென்னையில் டிசம்பா் 9 , 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஜூனியா் ஹாக்கி போட்டி குறித்து மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கோப்பையானது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கென சிறப்பு சுற்றுலாப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு கோப்பை எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, சேலம் சிறுமலா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கோப்பையை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சி.சிவரஞ்சன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அருள், தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, மாவட்ட விளையாட்டு அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, நிகழ்ச்சியையும் அவா் புறக்கணித்தாா்.