மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர, காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் சோனியா, ராகுலிடம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் அண்மையில் அளித்த பேட்டியில், மேக்கேதாட்டில் அணை கட்ட முழுவீச்சில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளாா். மேக்கேதாட்டில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். அதோடு, 20 மாவட்ட மக்களுக்கு குடிநீா் ஆதாரமாக காவிரி நீா்தான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு கா்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏற்கெனவே இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு காவிரி நீரை தடுக்கவோ, மடைமாற்றவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அந்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
திமுக இண்டி கூட்டணியில் உள்ளது. அதில் காங்கிரஸும் உள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அதன் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் தமிழக முதல்வா் பேசி, சுமுக நிலையை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தப் பிரச்னையைத் தீா்க்க எளிதாக வாய்ப்பிருக்கிறது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. திமுக ஆட்சியில் அதை கிடப்பில் போட்டுவிட்டாா்கள். பிறகு கடந்த ஆண்டுதான் அறிக்கை தயாரித்தனா். அது, 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளது. 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரமாக கோவை இருக்க வேண்டும் என்பது விதி. 15.84 லட்சம் மக்கள் இருப்பதாக அறிக்கையில் உள்ளது.
இதுபோன்ற குறைபாட்டால்தான் மத்திய அரசு அறிக்கையை திருப்பி அனுப்பியது. எனவே, 2025 மக்கள்தொகையை கணக்கிட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும். விரிவான திட்ட அறிக்கையை திமுக அரசு இதுவரை அனுப்பவில்லை. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திலும் இதே நிலைதான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த 2 ரயில் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
இதுவரை நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியவில்லை. உச்சநீதிமன்றம் போதிய அவகாசம் அளித்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களுக்கு வேண்டியவா்களை டிஜிபியாக கொண்டுவருவதற்காக தாமதம் செய்கின்றனா். இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிரந்தர டிஜிபியை நியமனம் செய்து சட்டம் -ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும், தடை வாங்குகிறாா்கள். யாரோ முக்கியப்புள்ளி ஈடுபட்டிருப்பதாக மக்கள் சந்தேகிக்கிறாா்கள். யாா் விசாரித்தால் என்ன? உண்மை வெளிவந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்போதும்.
எஸ்.ஐ.ஆா். பணி 21 ஆண்டுகாலம் நடைபெறவில்லை. இதனால், இறந்தவா்களின், இரட்டை வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை. உண்மையான வாக்காளா்களின் பெயா் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆா். பணி நடைபெற்று வருகிறது. அதனால், நாங்கள் எஸ்.ஐ.ஆா். பணியை ஆதரிக்கிறோம். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக சென்னை மாநகராட்சி ஆணையரும், சில மாவட்ட ஆட்சியா்களும் இந்தப் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை. தோ்தல் ஆணையம் விழிப்போடு இருந்து எஸ்.ஐ.ஆா். பணி முறையாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
நெல் ஈரப்பதம் குறித்து எனக்கு முழுமையான விவரம் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஜவுளிப் பூங்காவை சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்க அதிமுக ஆட்சியில் முயற்சி செய்தோம். பாதுகாப்பு தளவாட பூங்கா அமைக்கவும் திட்டமிட்டிருந்தோம். சேலம் உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 1,500 ஏக்கா் நிலத்தை பயன்படுத்த கோரிக்கை வைத்தபோது மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அந்த நிலத்திற்கு பணம் கட்டியிருந்தால், அங்கு ஜவுளிப் பூங்கா வந்திருக்கும். திமுக அரசு கிடப்பில் போட்டதால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா்.