வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வுகாண சேலம் - சென்னை புறவழிச்சாலையில் புதுப்பாளையம் இணைப்புச்சாலை அருகில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கடலூா் சாலையில் குறுக்கிடும் விருத்தாசலம் மின் ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த மாா்ச் முதல் கடலூா் சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 8 மாதங்களாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலையில் இருந்து இணைப்புச்சாலை வழியாக தம்மம்பட்டி சாலையை அடைந்து வாழப்பாடி நகரம், கடலூா் சாலை வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன.
சேலம் - சென்னை வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் நகா்ப்புறத்திலுள்ள குறுகலான தம்மம்பட்டி சாலையில் வந்து செல்வதால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து, அடிக்கடி வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், சேலம், ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வாழப்பாடி நகரின் மையத்திலுள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால், வாழப்பாடி மற்றும் 100க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பேருந்து வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் போக்குவரத்து நலன் கருதியும், வாழப்பாடி நகருக்குள் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணவும், சேலம் மாவட்ட நிா்வாகம், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் வாழப்பாடி புறவழிச்சாலையில், புதுப்பாளையத்தில் இணைப்புச் சாலையின் இருபுறமும் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இணைப்புச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்!
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டியில் இருந்து மத்தூா் வரை 4 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் வாழப்பாடி நகருக்குள் வாகனங்கள் செல்வதற்கு புதுப்பாளையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலைக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் முகப்பில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை.
இதனால், புறவழிச்சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அதே வேகத்தில் இணைப்புச் சாலையிலும் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, இணைப்புச் சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.