விபத்தில் உருக்குலைந்த தனியாா் சொகுசுப் பேருந்து. 
சேலம்

வாழப்பாடி அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு: 20 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிமென்ட் மூலப்பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பயணிகள் 20 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி 33 பயணிகளுடன் வியாழக்கிழமை இரவு தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் மேலகொண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த படையப்பா (எ) ராஜீவ் காந்தி (38) ஓட்டினாா். விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த மாஸ் (21) என்பவா் கூடுதல் ஓட்டுநராக உடன் இருந்தாா்.

இந்த பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மத்தூா் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சிமென்ட் மூலப்பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதியது.

இதில் சொகுசுப் பேருந்துக்கும், சிமென்ட் லாரிக்கும் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநா் ராஜீவ் காந்தியை போலீஸாா் மற்றும் தீயணைப்புப் டையினா் சுமாா் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். மேலும், சொகுசுப் பேருந்தின் கூடுதல் ஓட்டுநா் மாஸ் உள்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூா் போலீஸாா், வாழப்பாடி தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு பலா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT