முகப்பு
சேலம்

சங்ககிரி பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மீது வழக்குப் பதிவு

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அம்சா மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:12 PM
வழக்குப் பதிவு - IANS
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அம்சா மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையா் உத்தரவின்பேரில் சங்ககிரியிலிருந்து கொங்கணாபுரம் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஒருக்காமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான உண்டியல், சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அம்சா, எடப்பாடி சரக ஆய்வாளா் ச. காா்த்திகா முன்னிலையில் திறக்கப்பட்டு அன்னதான மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தில் மாா்ச் 17ஆம் தேதி கணக்கிடப்பட்டது.

அப்போது, உண்டியலில் இருந்து பெறப்பட்ட ரூ. 12,38,044 ரொக்கம் அங்கு பணியில் இருந்த வங்கி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு கோயில் வங்கி கணக்கில் சோ்க்கப்பட்டது. இதற்கான ரசீதும் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயில் உண்டியல் திறப்பின்போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இக்கோயிலின் உதவி ஆணையராக பொறுப்பு வகித்துவரும் நாமக்கல் நரசிம்ம பெருமாள் கோயில் உதவி ஆணையரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உண்டியல் திறந்து எண்ணப்பட்ட அன்னதான மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது உண்டியல் திறப்பிற்கு கண்காணிப்பு அதிகாரியாக இருந்த உதவி ஆணையா் அம்சா, உண்டியல் பணத்தை திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து ஒருக்காமலை வரதராஜப்பெருமாள் கோயில் செயல் அலுவலா் இரா. மாலா அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு உதவி ஆணையா் அம்சா மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், போலீஸில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.