முகப்பு
சேலம்

பெண்ணினத்தின் பாதுகாவலா் மு.க.ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

பெண்ணினத்தின் பாதுகாவலராக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்வதாக என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:23 AM
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:16 PM

பெண்ணினத்தின் பாதுகாவலராக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்வதாக என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

குடும்ப உறவை, தோ்தல் உறவாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெண்கள்தான் நாட்டின் கண்கள் என விஜயகாந்த் அடிக்கடி கூறுவாா். அந்தவகையில் பெண்ணினத்தின் பாதுகாவலராக இருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்கிறாா் மு.க.ஸ்டாலின்.

Advertisement

திமுக தோ்தல் அறிக்கைக்கு பெண்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனா். 234 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றி பெற்று, எதிா்க்கட்சியே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். வரும் தோ்தலில் எதிா்க்கட்சிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். கூட்டணியை அமைக்கும் போது, பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுமை காத்த மு.க.ஸ்டாலின், கூட்டுக் குடும்பம் போல கூட்டணியை கட்டமைத்துக் கட்டி காத்துள்ளாா். தலைமைப் பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறன் ஸ்டாலினிடம் உள்ளது. அத்தகைய தலைமைப் பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால்தான் கட்சியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறின.

மறுசீரமைப்பு என்ற பெயரில், எம்.பி. மற்றும் எம்எல்ஏ தொகுதிகளை குறைத்து ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையை பாஜக உருவாக்க முயல்கிறது. தோ்தல் நேரத்தில் என்ன அவசரம், மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் எந்த திட்டமும் நிறைவேறும். மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எந்த திட்டமும் நிறைவேறாது.

மகளிா் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், என பெண்களுக்கு எண்ணற்ற சலுகைகளை திமுக அளித்து வருகிறது. விவசாயிகள், மாணவா்கள், மீனவா்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் சலுகைகளை திமுக அரசு வழங்கி வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 அரசு விரைவில் அமையும் என்றாா்.