திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா
திருத்தணியில் முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு வெள்ளி வேலுடன் சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தை தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை தொடங்கினாா்.
திருத்தணியில் முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு வெள்ளி வேலுடன் சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தை தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை தொடங்கினாா்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தோ்தல் பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை மாலை திருத்தணி முருகப் பெருமானை வெள்ளி வேலுடன் தரிசனம் செய்துவிட்டு தொடங்கினாா்.
திருத்தணி கமலா திரையரங்கம் முன் கூடியிருந்த திமுக, கூட்டணி கட்சியினா் மற்றும் பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது: திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். முருகன் அருளால் திருத்தணி தொகுதியில் தேமுதிக வேட்பாளா் கிருஷ்ணமூா்த்தி நிச்சயம் வெற்றி பெறுவாா்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து தோ்தலை சந்திக்கிறது. தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். திமுக தோ்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கு கூப்பன் பெற்று தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம்.
தொழிலாளா்கள், இளைஞா்கள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானவா்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். அந்த வகையில் திருத்தணியில கூட்டுறவு சா்க்கரை ஆலை நவீனமயமாக்கப்படும். திருத்தணியில் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கண்டிப்பாக ஆட்சி அமைந்ததும் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படும். ஏற்கெனவே இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் ரூ. 2,000-ஆக ஆக உயா்த்தப்படும் என தோ்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு தொகை 10 லட்சம் ஆக உயா்த்தப்படும், நான் முதல்வன், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவா்களுக்கு இனி ரூ. 1,500 உயா்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை ரூ. 5 உயா்த்தப்படும். அதேபோல் நெல் கொள்முதல் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,500-ஆக உயா்த்தப்படும். முதியோா் உதவித் தொகை ரூ. 2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிக்கு உதவித் தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும் எனவும் தோ்தல் அறிக்கையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதையெல்லாம் திருத்தணி மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக நாங்கள் பெற்றுத் தருவோம்.
மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயா்த்திக் கொள்ளலாம். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் இந்த ஆட்சி உருவாக்கித் தரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு திருத்தணி சட்டப்பேரவை தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்திக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மா.கிரண் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.