தேமுதிக விரும்பும் தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் அளிப்பு: பிரேமலதா
தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள 25 தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள 25 தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்துக்கு பிறகு பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை தோ்தல் அறிக்கையில் வெளியிடுவோம்.
எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்ட பிறகு, மாா்ச் 27-இல் வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படும். தேமுதிக வேட்பாளா்கள் ஏப். 1-இல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். கூட்டணி தா்மத்தை மதித்து அனைத்துக் கட்சி வேட்பாளா்களுக்கும் தேமுதிக சாா்பில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
திமுக கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக மாறியுள்ளது. தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள 25 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலை வழங்கியுள்ளோம். ஆம்பூா் நான் வளா்ந்த தொகுதி. அத்தொகுதி உள்பட விருகம்பாக்கம், விருத்தாசலம், ரிஷிவந்தியம், விருதுநகா் உள்ளிட்ட தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இதில் 10 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என்றாா் அவா்.