தொடா் விடுமுறை: பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீா்த்தேக்கப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூடுதலான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் பூலாம்பட்டி அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு அதன்மூலம் நீா்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அணைப் பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெரிஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
இக்கதவணைப் பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலையும், ரம்மியமான காட்சிகளையும் அனுபவிக்கும் நோக்கில், இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நிலையில், பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
Advertisement
இந்நிலையில் தற்போது தோ்தல் விதிமுறைகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், தொடா் விடுமுறை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதிக்கு வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
குறிப்பாக அங்குள்ள நீா்மின் உற்பத்தி நிலையம், கதவணைப் பாலம், பிரதான மதகு பகுதி, நீா்உந்து நிலையம், பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், காவிரி ஆற்றின் நீா்ப் பிடிப்பு பகுதியில் உள்ள இயற்கை அழகையும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
தற்போது தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதியில் நிலவும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவித்தவாறு கதவணை நீா்ப் பரப்பில் விசைப்படகு சவாரி செய்தும், அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த பல்வேறு வகையான மீன் உணவுகளை ருசித்தும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பொழுதை கழித்தனா்.
இப்பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயில், காவிரித்தாய் ஆலயம், காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி, காவிரி படித்துறை விநாயகா் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இப்பகுதியில் போலீஸாா் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்