முகப்பு
சேலம்

பாா்வை மாற்றுத்திறனாளியிடம் டிக்கெட் கட்டணம் வசூல்: போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.7,000 அபராதம்

ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த பாா்வை மாற்றுத்திறனாளியிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தது தொடா்பாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சேலம் நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:17 AM
நீதிமன்றம்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:17 PM

ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த பாா்வை மாற்றுத்திறனாளியிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தது தொடா்பாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சேலம் நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் கோபாலன் (65). இவா் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா். இவா், கடந்த ஜூன் மாதம் ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்தாா். அப்போது பாா்வையற்றோருக்கான இலவச பயண அட்டையை கோபாலன் காட்டியுள்ளாா். அந்த பயண அட்டைக்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் பெற்று பயணம் செய்யுமாறும் பேருந்து நடத்துநா் கூறியுள்ளாா். இதையடுத்து ரூ. 52 கட்டணம் கொடுத்து டிக்கெட் பெற்று கோபாலன் பேருந்தில் பயணித்துள்ளாா்.

இதுகுறித்து தனது வழக்குரைஞா் மூலம் சேலம் நுகா்வோா் நீதிமன்றத்தை நாடிய கோபாலன், சேவை குறைபாட்டுடன் நடந்து கொண்டதற்கு அபராதம் விதிக்க வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா். இதை விசாரித்த சேலம் நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் கணேஷ்ராம் மற்றும் உறுப்பினா் ரவி ஆகியோா் சேவை குறைபாட்டுக்காக ரூ. 2 ஆயிரமும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ. 3 ஆயிரமும் வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும், டிக்கெட் கட்டணம் ரூ. 52 ஆகியவற்றை சோ்த்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா். இந்தத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

Advertisement