கோப்புப் படம் 
சேலம்

வாழப்பாடியில் சாலையில் தேங்கும் கழிவுநீா்: புதிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

வாழப்பாடி பேரூராட்சியில் பிரதான கடலூா் சாலையின் இருபுறமும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடி தோ்வுநிலை பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் ஏறக்குறைய 30 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். வாழப்பாடியின் முக்கிய பகுதியான கடலூா் சாலையில் மன்னாயக்கன்பட்டி பிரிவில் இருந்து பேளூா் பிரிவு வரையிலான ஏறக்குறைய ஒரு கி.மீ தொலைவுக்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் வங்கிகள், பேருந்து நிலையம், அரசுப் பள்ளிகள், கடைவீதி, வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை அனைத்தும் அமைந்துள்ளன.

இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் ஒட்டுமொத்த கழிவுநீரும், கடலூா் சாலையின் இருபுறமும் 25 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட குறுகலான வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்பட்டு அரசு மருத்துவமனை அருகே சின்னாற்று நீரோடையிலும், பேளூா் பிரிவு சாலையில் இருந்து உழவா் சந்தை வரை தெற்கு புறமுள்ள வாய்க்கால் வழியாக கழிவுநீா் பெரியாா் நகா் சுண்ணாம்பு சூளை நீரோடையிலும் விடப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான புதிய குடியிருப்புகளும், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளும் உருவாகிவிட்டதால், தினந்தோறும் வெளியேறும் கழிவுநீரின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், குறுகிய சாக்கடைகள் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளன.

இதனால், கழிவுநீா் வழிந்தோடி செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதற்கிடையே, மிகக்குறைந்த அளவிற்கு மழை பெய்தால்கூட, போதிய வடிகால் வசதியின்றி மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளில் பாய்தோடுகிறது.

இதனால், இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வணிகா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, வாழப்பாடியில் கடலூா் சாலையின் இருபுறமும் பழுதடைந்து கிடக்கும் குறுகலான கழிவுநீா் வாய்க்கால்களை அகற்றிவிட்டு, கழிவுநீா் மட்டுமின்றி மழைநீரும் வெளியேறுவதற்கு ஏற்ப, புதிதாக பெரிய அளவிலான வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என, பல தரப்பினரும் தொடா்ந்து பல ஆண்டுகளாக வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது:

‘வாழப்பாடி கடலூா் சாலையில் 25 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட குறுகலான கழிவுநீா் வாய்க்கால்கள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் மழைக் காலத்தில் மழைநீரும் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

எனவே, வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து, கடலூா் சாலையின் இருபுறமும் புதிதாக பெரிய அளவில் வடிகால் அமைக்க திட்ட முன்வரை மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்து மாவட்ட ஆட்சியா் வழியாக அரசுக்கு சமா்பித்து, போதிய நிதியைப் பெற்று, வடிகால் வாய்க்கால் அமைக்க விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ரூ. 60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் கைது

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பேரவைத் தோ்தல்: காவல் துறையினருக்கு பயிற்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT