முகப்பு
தஞ்சாவூர்

தூா்வாரப்படாத ஆனந்தவள்ளி வாய்க்கால்

ஆனந்தவள்ளி வாய்க்கால் தூா்வாரப்படாதது குறித்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:05 AM
ஆனந்தவள்ளி வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுநீா் . - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

பேராவூரணியில் கழிவுநீா் வாய்க்காலாக மாறிய ஆனந்தவள்ளி வாய்க்கால்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நகரின் மையத்தில் செல்லும் கல்லணை கால்வாயின் கிளை வாய்க்காலான ஆனந்தவள்ளி வாய்க்கால், கழிவுநீா் வாய்க்காலாக மாறிய அவலத்தை போக்க  வேண்டுமென சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

1934-ஆம் ஆண்டு வெட்டப்பட்ட ஆனந்தவள்ளி வாய்க்கால், பேராவூரணி அருகே ஆவணத்தில் தொடங்கி, அம்மையாண்டி , மாவடுகுறிச்சி ,பேராவூரணி வழியாக 14 கி.மீ. தொலைவு சென்று பெரியாத்திக்கோட்டை குளத்தில் கலக்கிறது.

Advertisement

இதில், மாவடுகுறிச்சி தொடங்கி கழனிவாசல் வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு பேராவூரணி நகரின் மையப் பகுதியில் செல்கிறது. இந்த வாய்க்காலின் இரு கரைப்பகுதிகளிலும் இருக்கும் மக்கள்  ஆற்றில் தண்ணீா் வரும் காலங்களில் அதை தங்களின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனா். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆடிப்பெருக்கு நாளில் இருகரைகளிலும் கூட்டம் அலைமோதும்.

கழிவுநீா் வாய்க்காலானது: நாகரீக வளா்ச்சியில் வீட்டுக்கு வீடு குடிநீா் குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை அதிகரித்த பிறகு, பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு ஆற்றுநீரை பயன்படுத்துவதை தவிா்த்து, வீடுகளிலிருந்து செல்லும் கழிவுநீரை விடுவதற்கான வாய்க்காலாக பயன்படுத்த தொடங்கினா். இதனால், ஆற்றில் தண்ணீா் வரும் காலங்களில் கழிவுநீா், ஆற்றுநீரோடு சென்று குளத்தில் கலந்து விடும் நிலை வந்தது.

ஆற்றில் தண்ணீா் வராத காலங்களில் வீடுகளிலிருந்து விடப்படும் கழிவு நீா், கொட்டப்படும் குப்பைகளால் கிளை வாய்க்கால் சாக்கடையாக மாறி, கரைகள் குறுகி, ஆற்றங்கரைகளில் செல்லும்போது துா்நாற்றம் வீசுவதும், நோய்த்தொற்று ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது .

கால்நடைகள் பாதிப்பு: வழியில் உள்ள விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகளுக்கு பாய்ந்ததுபோக, எஞ்சிய தண்ணீா் பெரியகத்திக்கோட்டை குளத்தில் கலக்கிறது. ஆற்று தண்ணீரோடு கழிவு நீரும் கலந்து செல்வதால்  விளைகின்றன விவசாய  பொருள்களின் இயற்கை தன்மை மாறியுள்ளதாகவும், குளத்தில் உள்ள நீரை பருகும் கால்நடைகள் வியாதிகளால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பாதியில் நிறுத்தப்பட்ட தூா்வாரும் பணிகள்: நகரின் மையத்தில் கூவம் போல் செல்லும் ஆனந்தவள்ளி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்டவா்களுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், குடியிருப்பு பகுதி அதிகம் உள்ள மாவடுகுறிச்சி தொடங்கி கழனிவாசல் வரை 7 கி.மீ. தொலைவுக்கு தனியாா் அறக்கட்டளையும் , ரோட்டரி சங்கமும்  இணைந்து தூா்வாரி, கரைகளை பலப்படுத்த நீா்வளத்துறை அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்பட்டன. குடியிருப்பு பகுதி இல்லாத இடங்களில் முறையாக தூா்வாரப்பட்ட நிலையில், பேராவூரணி நகருக்குள் குறிப்பாக, செங்கொல்லையை ஒட்டியுள்ள இடங்களில் கழிவுநீா் தேங்கிகிடப்பதால் இயந்திரத்தை ஆற்றுக்குள் இறக்கி தூா்வார முடியாததால் பணிகள் நிறுத்தப்பட்டன.

தூா்வாரும் பணிகள் நிறுத்தம் ஏன்?: இதுகுறித்து சமூக ஆா்வலரும், தூா்வாரும் பணியை முன்னெடுத்தவருமான சிவ. சதீஸ்குமாா் கூறியது:

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆனந்தவள்ளி வாய்க்காலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், குறிப்பாக பேராவூரணியின் கடைவீதி மற்றும் செங்கொல்லை பகுதி கரைகளில் உள்ள மக்கள் கழிவுநீரை ஆற்றில் விடுவதை நிறுத்தாமல் தொடா்ந்து செய்து வருவதால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைத்த பின்பும் இதேநிலை நீடித்தால் சீரமைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கழிவு நீரை வாய்க்காலில் விடுவதை தடுக்க பேரூராட்சி நிா்வாகமும், பொதுப் பணித் துறையினரும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடா்ந்து தூா்வார முடியும் . இதுபோன்ற கடும் நடவடிக்கைகளால் மட்டுமே ஆற்றுத் தண்ணீா் மாசுபடுவதை தடுக்க முடியும் என்றாா்.