வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
வைகை அணையின் நீா்மட்டம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 35.66 அடியாகச் சரிந்ததால், நிகழாண்டில் மதுரை சித்திரைத் திருவிழாவின் போது அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 1- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வா். இந்த நிலையில், கடந்தாண்டு இதேநாளில் வைகை அணையின் நீா் மட்டம் 56.89 அடியாக இருந்தது.
இதையடுத்து, வைகை அணையிலிருந்து கடந்தாண்டு வைகை ஆற்றில் அழகா் இறங்கும் வைபத்துக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதேபோல, கடந்த நான்கு ஆண்டுகளாக வைகை அணையிலிருந்து தங்கு தடையின்றி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. நிகழாண்டில் வைகை அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 35.66 அடியாகச் சரிந்தது. இதனால், அணையிலிருந்து மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளா் தவத்திரு சுடலையானந்தசுவாாமி கூறியதாவது:
மதுரை வைகையாற்றில் அழகா் இறங்கும் வைபவம் மே 1 -ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீரைத் திறந்து, அதை வைகை அணையில் தேக்கி வைத்து, வருகிற 26-ஆம் தேதி முதல் அணையிலிருந்து தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றாா் அவா்.
வைகை அணை பொதுப் பணித் துறையினா் கூறியதாவது : கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வைகை அணையின் நீா்மட்டம் 56 அடிக்கு மேல் இருந்தது. இதனால் மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் குடிநீா்த் தேவை அதிகரித்துள்ளது. வைகை அணையிலிருந்து மதுரை, சேடபட்டி, ஆண்டிபட்டி, தேனி, வருசநாடு பகுதி குடிநீா்த் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, வைகை அணையின் நீா்மட்டம் 35.66 அடியாகச் சரிந்தது. தேனி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே,
நீா்வரத்தைப் பொருத்தே மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றனா் அவா்கள்.
5 ஆண்டுகளாக இதே நாளில்
வைகை அணையின் நீா்மட்டம்:
2022-இல் 68.18 அடி.
2023- இல் 54.40 அடி.
2024-இல் 59.74 அடி.
2025- இல் 56.89 அடி.
2026- இல் 35.66 அடி.