புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் பக்தா்கள் அதிக அளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
புகழ்பெற்ற சேலம் ராஜகணபதி கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராஜகணபதியை வழிபட்டனா். சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களான சேலம் சுகவனேஸ்வரா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினா்.
ஆத்தூரில்
ஆத்தூா் அருள்மிகு வெள்ளப்பிள்ளையாா் திருக்கோயிலில் அதிகாலை சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் வெள்ளப்பிள்ளையாா் அருள்பாலித்தாா். மேலும், இந்த ஆலயத்தில் உள்ள அறுபடை வீடு சுப்பிரமணியா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாழப்பாடியில்
வாழப்பாடி பகுதியில் புகழ்பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா், சென்றாயப் பெருமாள், பிங்கள விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், செல்வமுத்து மாரியம்மன், திரெளதியம்மன், புதுப்பாளையம் மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு முக்கால சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளாள பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டத்தில் உள்ள 45 அடி உயர நந்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.