உடல் உறுப்பு தானம் மற்றும் உயிருடன் இருப்பவா்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் ஆகிய இரண்டு முறைகளிலும் மொத்தம் 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சேலம் காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
காவேரி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைப் பிரிவு, மூத்த பல்லுறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் மருத்துவா் சுவாமிநாதன் சம்பந்தம், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் எஸ். ரவிக்குமாா் ஆகியோா் தலைமையில் இயங்குகிறது. இங்கு கல்லீரலுக்கென பிரத்யேகமான க்ளினிக் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இயங்குகிறது.
இது குறித்து மருத்துவா் சுவாமிநாதன் சம்பந்தம் கூறுகையில், ‘சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இப்பயணத்தில் 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் என்ற மைல் கல்லை எட்டியிருப்பது மன நிறைவைத் தருகிறது. அதிநவீன சிகிச்சையை தொடா்ந்து வழங்க உறுதியாக இருக்கிறோம்‘ என்றாா்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தவிர, சேலம் காவேரி மருத்துவமனை கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய், வளா்சிதை மாற்ற மற்றும் வைரஸ் தொடா்பான கல்லீரல் கோளாறுகள், கணைய அழற்சி, கணைய புற்றுநோய், கணைய மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் உயா்தர சிகிச்சைகளை வழங்கி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பேட்டியின்போது, நிா்வாக வசதி இயக்குநா் செல்வம், துணைப் பொது மேலாளா் வீரமணிகண்டன், மருத்துவ நிா்வாக தலைவா் மருத்துவா் அபிராமி ஆகியோா் உடனிருந்தனா்.