பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியாக மைசூா்- தூத்துக்குடி மற்றும் பெங்களூரில் இருந்து கொல்லம், கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வரும் 13 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மாண்டியா, சென்னப்பட்டணா, பெங்களூரு, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் வழியாக தூத்துக்குடியை அடுத்த நாள் காலை 11 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வரும் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மதுரை, கரூா், நாமக்கல்,சேலம், தருமபுரி, பெங்களூரு வழியாக மைசூருரை அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு சென்றடையும்.
இதேபோல பெங்களூரு- கொல்லம் இடையே வரும் 13 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் மாலை 4 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கொல்லத்திலிருந்து வரும் 14 ஆம் தேதி மாலை 6.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், பெங்களுரு கன்டோன்மென்ட் ரயில்வே நிலையத்துக்கு அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது.
இதேபோல பெங்களூரு கன்டோன்மென்ட் - கண்ணூா் இடையே வரும் 13 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு வழியாக அடுத்த நாள் காலை 7.50 மணிக்கு கண்ணூரை அடையும்.
மறுமாா்க்கத்தில் கண்ணூா்- பெங்களுரு கன்டோன்மென்ட் இடையே வரும் 14 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கண்ணூரில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 4.10 மணிக்கு பெங்களுரு கன்டோன்மென்ட்டை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.