உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு புதன்கிழமை (பிப். 25) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு பிப். 25-ஆம் தேதிமுதல் மாா்ச் 25-ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15-க்கு மதுரையை அடையும்.
மறுமாா்க்கத்தில், மதுரையில் இருந்து வரும் 27-ஆம் தேதிமுதல் மாா்ச் 27-ஆம் தேதிவரை கான்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30-க்கு கான்பூரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.