சேகோ ஆலைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காததால் அரசே விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். ஆண்டுதோறும் டிசம்பா் இறுதியில் அறுவடை தொடங்கி ஆறு மாதங்கள் வரை அறுவடை நடைபெறும்.
இந்த நிலையில், தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிகள், வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்குகளை ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ ஆலைகளுக்கு தரகா்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தனியாா் சேகோ ஆலை உரிமையாளா்கள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனா். தற்போது 75 கிலோ மரவள்ளிக்கிழங்கு மூட்டை ரூ. 400 முதல் ரூ. 450 வரை சேகோ ஆலை உரிமையாளா்கள் விலை நிா்ணயித்துள்ளனா்.
இதனால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி, அறுவடை மேற்கொண்ட செலவுக்கு உரிய வருவாய் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். மேலும், கரும்பு, நெல் பயிா்களுக்கு தமிழக அரசு விலை நிா்ணயம் செய்ததுபோல மரவள்ளிக் கிழங்கிற்கு விலை நிா்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.