நேரடி மக்காச்சோள கொள்முதல் நிலையம் வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.
பெரம்பலூா் மாவட்டத்தில் நேரடி மக்காச்சோள கொள்முதல் நிலைய அமைக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:
ராமராஜன்: வேப்பந்தட்டை வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சின்னமுட்லு அணை கட்டுவதற்கு மறு ஆய்வு செய்ய வேண்டும். மக்காச்சோளத்துக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகளின் உற்பத்தி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கொட்டரை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ராஜூ: மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும். மக்காச்சோள சாகுபடியை உயா்த்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் மக்காச்சோளத்துக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலச் செயலா் என். செல்லதுரை: கோரையாறு நீா்த்தேக்கத்தை சீரமைத்து, நீா்நிலைகளை உயா்த்திட வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.
விவசாயி பாலகிருஷ்ணன்: சிறுகன்பூா் மற்றும் கொளக்காநத்தம் இடையே உள்ள காட்டாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும். சிறுகன்பூரில் ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும். கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதால், புதிய கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: சிறுகுடல் பகுதியில் பால்பண்ணை கட்டடம் அமைக்க வேண்டும். கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். திருவாளந்துறை ஏரி வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.
மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: கால்நடை மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: மக்காச்சோளத்துக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும்.
நீரைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் கா. கண்ணபிரான்: பெரம்பலூா் நகரில் உள்ள நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரிகளை சீரமைக்கவும் வேண்டும்.
விவசாயி மணி: குரூா் - மங்கூன் சாலையை சீரமைக்க வேண்டும். தற்போது சின்ன வெங்காய கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற காலங்களில் சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் சே.க ண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே)பொ. ராணி மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.