ஓமலூா்: அம்மாபாளையம் பகுதியில் சாயப் பட்டறைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் ஓமலூா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விவேகானந்தன் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனா். அதில், சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் 60 சாயப் பட்டறைகள் மற்றும் 30 சலவைப் பட்டறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பட்டால் 40 கி.மீ. சுற்றளவில் நிலம், நீா், காற்று மாசடைந்து விவசாயமும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, 20 ஊராட்சிகளிலும் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா்.