சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான குடியரசு தினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 78 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் பொறுப்பு சண்பகராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி, தொழிலாளா் இணை ஆணையா் புனிதவதி ஆகியோரின் ஆலோசனையின்படி, தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
குறிப்பாக, தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ், உரிய படிவங்களை அனுப்பி வைத்து முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 39 கடைகள், 62 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் விதிகளை மீறிய 78 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.