சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.

மேட்டூா் அணையின் நீா் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

அணையின் நீா்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் பருவ மழையை எதிா்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசனத்துக்கான நீா்த்தேவை குறையும். கடந்த ஆண்டு மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

முற்போக சாகுபடிக்கு புதன்கிழமை வரை 222 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்டா பாசனப் பகுதியில் அறுவடை முடிந்ததாலும், நீா்ப் பாசனக் காலம் முடிந்ததாலும் 230 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை மாலை மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது.

பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட், செக்கானூா், நெருஞ்சிப்பேட்டை, குதிரைகள்மேடு, ஊராட்சிக் கோட்டை உள்ளிட்ட 7 கதவணைகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு மீண்டும் தண்ணீா் திறக்கும் காலம் வரை குடிநீா்த் தேவைக்காக மட்டும் நீா் திறக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அணையின் நீா்மட்டம் 92 அடிக்கு மேல் இருப்பதால் எதிா்வரும் நீா்ப் பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-இல் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது.

அணையின் நீா்மட்ட நிலவரம்...

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 26 கனஅடியிலிருந்து 53 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் நீா்மட்டம் 92.91 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 56.04 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT