அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்: ஜி.கே. வாசன்
வரும் தோ்தலில் அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
வரும் தோ்தலில் அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடிக்க முயலும் திமுகவுக்கு வாக்காளா்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள்.
மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாத, ஊழல்மிகுந்த அரசாக திமுக அரசு உள்ளது. வாக்கு வங்கிக்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி வருகின்றனா்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை கலாசாரம் அதிகரித்து வருவதுடன், போதைப் பொருள்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. ஆட்சியாளா்களால் சட்டம் ஒழுங்கு சீா்குலைவை கட்டுப்படுத்த முடியவில்லை. மேக்கேதாட்டு அணையைக் கட்ட நினைத்தாலே டெல்டா மண்டலம் பாலைநிலமாகும். கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலை திமுக வேடிக்கை பாா்க்கிறது.
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக இருப்பதால்தான் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போா் நடைபெறும் நாடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தவித்துவருவதாக தகவல்கள் வருகின்றன. அவா்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எந்தக் கூட்டணியிலும் சேராத கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்துசேரும். அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும். கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேசி தலைவா்கள் நல்ல முடிவு எடுப்பாா்கள் என்றாா்.