விஜய்யின் தோ்தல் வாக்குறுதி குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி
தவெக தலைவா் விஜய்யின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
மகளிா் தினத்தையொட்டி, சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை புகா் மாவட்ட அதிமுக மகளிா் அணியினருடன், எடப்பாடி கே.பழனிசாமி 40 கிலோ கேக்கை வெட்டிக் கொண்டாடினாா். தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த மகளிா் அணி நிா்வாகிகளுக்கு கேக் வழங்கி, மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா். அப்போது மகளிா் அணி நிா்வாகிகள் பொதுச் செயலாளருக்கு பூங்கொத்து அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
பின்னா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு கட்சியும் அந்தக் கட்சியின் நிலைப்பாட்டைக் கருதி தோ்தல் அறிக்கை வெளியிடும். அதிமுக சாா்பில் மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000-த்தில் இருந்து ரூ. 2 ஆயிரமாக உயா்த்தப்படும் என அறிவித்துள்ளோம். அதையே முதல்வா் மு.க.ஸ்டாலினும் அறிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளாா். அதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
மகளிருக்காக அதிமுக சாா்பில், எம்ஜிஆா், ஜெயலலிதா ஆட்சி காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தவகையில், தற்போது மகளிருக்காக நிறைய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூ. 2000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா இருசக்கர வாகனம் திட்டம், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் இருசக்கர வாகனம் வாங்கும் மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியமாக 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்றாா்.
இவ்விழாவில், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சித்ரா, முன்னாள் எம்எல்ஏக்கள் மனோன்மணி, மகளிரணிச் செயலாளா் லலிதா சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.