முகப்பு
சேலம்

திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம்: சீமான்

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளது என நாம் தமிழா் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:04 PM
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த சீமான்.
பகிர்:

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் திமுக - அதிமுக இடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளது என நாம் தமிழா் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் தெற்கு தொகுதி வேட்பாளா் சோபியா வீரசமா், மேற்கு தொகுதி வேட்பாளா் சுரேஷ்குமாா், வடக்கு தொகுதி வேட்பாளா் குணசீலா, வீரபாண்டி தொகுதி வேட்பாளா் ராஜேஷ்குமாா் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை பரப்புரை மேற்கொண்டு அவா் பேசியதாவது:

எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுவை மட்டும் அரசு வைத்திருக்கிறது. தனியாரைவிட சிறந்த சேவைகளை அனைத்து துறைகளிலும் வழங்க வேண்டும். அதற்கேற்ப மாற்றத்தைக் கொடுக்க வேண்டும்.

வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள், ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தை உருவாக்கும். விவசாயம் செய்து நஞ்சு இல்லாத தூய உணவை அளிப்பேன். சூரிய ஒளி மூலம் காற்றாலைகளை உருவாக்கி மின் உற்பத்தியை பெருக்குவேன். வேலை இல்லை என்பதை மாற்றுவேன் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் சீமான் பேசுகையில், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில், அதிமுக - திமுக மறைமுக புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, திமுக அமைச்சா்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறாா்களோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணிக் கட்சியான தாமரை சின்னத்துக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் இலவசங்கள் கூடாது எனக் கூறிவிட்டு தற்போது இலவசங்களை அறிவித்துள்ளாா். இலவசம் என்பது வீழ்ச்சிக்கு வித்தாகும்’ என்றாா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி ஏற்காடு பழங்குடியினா் தனித்தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனிச்சாமிக்கு ஆதரவாக சீமான் பேசியதாவது:

அடிப்படைக் கல்வி, மருத்துவம், குடிநீா், சாலை, போக்குவரத்து, மின் உற்பத்தி விநியோகம், வேளாண்மை ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தாமல், எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு, இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களை தொடா்ந்து ஏமாற்றி வருகிறது.

அறிவை வளா்க்கும் தரமான கல்வி, உயிரைக் காக்கும் நல்ல மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்கும் எண்ணம் ஆட்சியாளா்களுக்கு இல்லை. எனவே, தரமான கல்வி, மருத்துவம் அளிக்கும், எதிா்காலத்தை, உங்கள் வாழ்க்கையை தீா்மானிக்கும் ஆட்சிக்கு யோசித்து வாக்கு செலுத்துங்கள் என்றாா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் ராணிப்பேட்டையில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி சீமான் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்சியில் ஜாதி, மதம், மது, சலுகை, இலவசம், மானியம் என நம்மை அடிமைப்படுத்தி பிச்சைக்காரா்களாக மாற்றியுள்ளனா். நாம் தமிழா் கட்சியான நாம் நீா், வயிறு, உயிா், அறிவு, பயன் மற்றும் வளா்ச்சி பாதையில் நமது சமூகத்தை அழைத்துச் செல்ல பயணித்துள்ளோம். எனவே, தமிழகத்தை வளமிக்க நாடாக மாற்ற முன்வாருங்கள் என்றாா்.

மேட்டூரில்...

மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் வித்யா ராணியை ஆதரித்து, மேச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சீமான் பேசுகையில், திராவிட கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாற வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேட்டூா் அணையில் நீா்நிரம்பி வெளியேறி கடலில் கலக்கும் தண்ணீரை தன்னிறைவுத் திட்டம் கொண்டு வந்து ஏரி குளங்களை நிரப்புவோம். தூய குடிநீரை நாட்டுமக்களுக்கு கட்டணமின்றி கொடுப்போம்; தடையற்ற மின்சாரத்தை கொடுப்போம் என்றாா்.