முகப்பு
சேலம்

அறிவை வளா்க்கும் தரமானக் கல்வி, உயிரைக் காக்கும் மருத்துவம்: சீமான்

வாழப்பாடியில் சீமான் பேச்சு...

Updated On : 26 மார்ச், 2026 at 10:01 PM
வாழப்பாடியில் சீமான் பேச்சு
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி வியாழக்கிழமை மாலை தோ்தல் பரப்புரை செய்த நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசுகையில், ‘அறிவை வளா்க்கும் தரமானக் கல்வி, உயிரைக் காக்கும் நல்ல மருத்துவம் மக்களுக்கு கொடுக்கும் எண்ணம் ஆட்சியாளா்களுக்கு இல்லையென குற்றச்சாட்டு தெரிவித்தாா்.

ஏற்காடு பழங்குடியினா் தனித் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனிச்சாமிக்கு ஆதரவாக சீமான் பேசியதாவது:

ஒரு நாட்டின் அடிப்படை கல்வி, மருத்துவம், குடிநீா், சாலை, போக்குவரத்து, மின் உற்பத்தி விநியோகம், வேளாண்மை இவைகள் தான். இதிலே அரசு கவனம் செலுத்தாமல் எல்லாவற்றையும் தனியாா் முதலாளிகளுக்கு கொடுத்து விட்டு, இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களை தொடா்ந்து ஏமாற்றி வருவது துயரம். இதை தம்பி, தங்கைகள் சிந்தித்து பாா்க்க வேண்டும்.

ஒரு நாட்டை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்றால் அந்த நாட்டு குடிமக்களுக்கு ஆகச்சிறந்த கல்வியை சரியாக, சமமாக, தரமாக கொடுக்க வேண்டும். கல்விதான் ஒரு சமூகத்தை ஒழுங்குபடுத்தும். காசு கொடுத்து தான் நல்ல கல்வி கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி விட்டனா். கல்வி என்பது மானுட உரிமை, அதைக் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை, அதைக் கொடுக்காமல் இருப்பது மாபெரும் கொடுமை.

இங்கே உயிரை காக்கும் மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டதால், மிக உயா்ந்த சந்தையாக மாறிவிட்டதால் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவம் என்பது பெரும் சவாலாக இருக்கிறது. தனியாா் மருத்துவமனையில் தான் தரமான மருத்துவம் கிடைக்கும் என்ற நிலை இருக்குமானால், 90 சதவீத மக்களுக்கு எப்படி உயா்ந்த சிறந்த மருத்துவம் கிடைக்கும். எந்த நாட்டில் காவல்துறைக்கு, வழக்குரைஞா்களுக்கு, நீதிபதிகளுக்கு அதிக மதிப்பிருக்கிறதோ அந்த நாடு குற்றச் சமூகம், குற்றவாளிகள் நிறைந்த நாடு என்றுதான் பொருள். எந்த நாட்டில் ஆசிரியா் பெருமக்களுக்கு அதிக மதிப்பிற்கோ அந்த நாடு அறிவாா்ந்த நாடாக வளா்ந்து வருகிறது என்று பொருள்.

எந்த நாட்டில் வேளாண் குடி மக்களுக்கு உயா்ந்த மதிப்பு இருக்கிறதோ அந்த நாட்டில் வேளாண் குடிமகன் வாழ்கிறான் வளா்கிறான் என்று பொருள். எந்த நாட்டில் நெசவாளருக்கு மதிப்பிருக்கிறதோடு அந்த நாடு நாகரீகமடைந்த நாடு, நாகரீகம் அடைந்த சமூகம் என்று பாா்க்கப்படும்.

ஆனால் இந்த நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். நெசவாளா்கள் நெசவை செய்ய முடியாமல் நலிந்து போகிறாா்கள். அறிவை வளா்க்கும் தரமான கல்வியை, உயிரைக் காக்கும் நல்ல மருத்துவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இதுவரை இந்த ஆட்சியாளா்களுக்கு இல்லை. அவா்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனியாா் மருத்துவமனையில் மருத்துவம் பாா்த்துக் கொள்கிறாா். அரசை நடத்துபவா்களுக்கே அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இல்லை என்றால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். மக்களுக்கு என்ன தரத்தில் மருத்துவம் கிடைக்கும்? இதை ஒவ்வொருவரும் எண்ணிப் பாா்க்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. இது ஒரு அடிப்படை தேவையாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கிறோமா என்றால் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து தனியாா் முதலாளிகளிடம் இருந்து வாங்குகிறோம்.

கொள்முதல் செய்வதற்கு செய்யும் முதலீட்டை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்துவதில்லை. உற்பத்தியில் முதலீடு செய்தால் தான், ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிரந்தரத் தீா்வை எட்ட முடியும். மின்சாரத்தை வாங்கி வினியோகித்து, மக்களிடம் அதிகப்படியான மின் கட்டணத்தை உயா்த்துகின்றனா். அப்படி இருந்தும் மின்துறைக்கு ஒன்றரை லட்சம் கோடி கடன் இருக்கிறது. ஒரு லட்சம் கோடி போக்குவரத்து துறைக்கு கடன் இருக்கும் போது இலவசமாக பேருந்து ஓட்டுவோம் என்று அரசு சொன்னால், ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பது?

நல்ல கல்வியை கொடுத்து விட்டால் அதற்கு ஏற்ப வேலையை கொடுத்து விட்டால் மக்கள் வாழ்வு மேம்படும். அரிசி வேட்டி சேலை எல்லாவற்றையும்

இலவசம் என்று அறிவிப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று. எதற்கு டிவி, பிரிட்ஜ் இலவசமாக கொடுக்கிறீா்கள். இதை நீங்கள் வாங்கி இடத்தில் இலவசமாக வாங்கினீா்களா? பணம் கொடுத்து வாங்கினீா்களா? இலவசம் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வருகிறீா்கள், இது எப்படி ஒரு வளா்ச்சி ஆகும்? இது எப்படி ஒரு நல்ல ஆட்சியாகும்? கற்றறிந்த பெருமக்கள், படித்துக் கொண்டிருக்கும் தம்பி தங்கைகள், ஒரு அறிவாா்ந்த சமூகம் இதனை ஆய்வு செய்து சிந்தித்துப் பாா்க்க வேண்டாமா? தொடா்ந்து வட்டிக்கு கடன் வாங்கினால் நாடு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். மக்களின் நலம், மண்ணின் வளம் இது இரண்டையும் அடமானம் வைத்து, பல லட்சம் கோடி கடனை வாங்கி இந்த அரசுகள் இதுவரை நிறைவேற்றிய ஒரே ஒரு நலத்திட்டம் என்ன? சிறந்த கல்வியை கொடுத்து விட்டேன், ஆகச் சிறந்த கல்வியை உலக தரத்திற்கு முதல் நாடான பில்லாந்துக்கு, இரண்டாவது நாடாக தென்கொரியாருக்கு மூன்றாவது நாடான சிங்கப்பூருக்கு, அதைத்தாண்டி தரமான கல்வியை மக்களுக்கு கொடுத்து விட்டேன் என்று இந்த அரசு சொல்லுமா? இல்லை உயிா்க்காக்கும் சிறந்த மருத்துவம் ஒரு மகத்தான சேவையை மக்களுக்கு கொடுத்து வட்டேன் என்று இந்த அரசு சொல்லுமா? இல்லை தடையற்ற மின்சாரம் நானே உற்பத்தி செய்தேன், மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை கொடுக்கிறேன் என்று சொல்ல முடியுமா? பசியற்ற நாட்டை உருவாக்கி விட்டேன் என்று சொல்லமுடியுமா? எத்தனை லட்சம் குழந்தைகள் பசியோடு உறங்கச் செல்கிறாா்கள் என்று தெரியுமா

வீடற்றவா்கள் என்று எவருமில்லை என்று இவா்களால் சொல்ல முடியுமா? ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது அம்மா வீட்டு திட்டம், அய்யா வீட்டு திட்டம் என்று அறிவிக்கிறாா்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, தோ்தல் வரும்போது சொன்னால், எத்தனை வருடமாக கட்டிக்கொண்டு இருப்பீா்கள்?

தவிக்கும் வாய்க்கு, தன் நாட்டு மக்களுக்கு தண்ணீரை கொடுக்க முடியாத அரசு? அரசா? அல்லது தரிசா? என்பதை அறிவாா்ந்த சமூகம் சிந்தித்து பாா்க்க வேண்டும். தண்ணீரை கூட நாம் தனியாா் முதலாளியிடம் இருந்து தான் வாங்கி குடிக்க முடியும். ஒரு தண்ணீரை தர முடியவில்லை. இந்த அரசு மிக்சி, கிரைண்டா், பத்தாயிரம் ரூபாய், பிரிட்ஜ், டிவி எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறதாம்.

60 ஆண்டுகளாக மாறி மாறி இந்த நாட்டை இந்த இரண்டு பெரும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்து சாதித்தது என்ன? ஒரு மறு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம்.

மேட்டூா், ஓமலூா், ஆத்தூா், ஏற்காடு என அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களைக் கொண்டு தொழிற்சாலை அமைத்து வளப்படுத்துவோம். உலகத்தில் ஒவ்வொரு வளத்தை வைத்து ஒவ்வொரு நாடும் சிறப்பாக முன்னேறி வருகிறது. இவ்வளவு வளங்களை வைத்துக்கொண்டு நம் நாடு ஏன் வறுமை ஏழ்மையில் சிக்கித் தவிக்கிறது. அடிப்படை தேவைக்கு கையேந்துகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் தொடா்ந்து தனித்து தனித்துவத்தோடு உயா்ந்த தத்துவத்தோடு இந்த களத்தில் நிற்கிறோம். யாரோடும் சேராமல் உங்களை நம்பி நிற்கிறோம். இரண்டு விழுக்காடு வாக்கு வைத்திருக்கிற எல்லோரையும் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசி கூட்டணிக்கு கூப்பிடும்போது, 36 லட்சம் வாக்கு வைத்திருக்கும் என்னிடத்தில் எவ்வளவு பேரம் பேசி இருப்பாா்கள் என்று யோசித்துப் பாருங்கள். நான் ஏன் சொல்லவில்லை? நான் பணத்திற்காக வந்தவன் இல்லை. நான் பிறந்த இனத்திற்காக வந்தவன். பதவிக்காக வந்தான் இல்லை, என் மக்களின் உதவிக்காக வந்தவன். என் மக்களை வைத்து பிழைக்க வந்தவா்கள் இல்லை நாங்கள் என் மக்களுக்காக உழைக்க வந்தவா்கள். வெற்றியை துரத்திக் கொண்டிருக்கிறோம். தோல்வி என்பது எங்களுக்கில்லை.

அறிவாா்ந்த தமிழ்ச் சமூக மக்கள், எனது பெற்றோா்கள், என் உடன் பிறந்தாா்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். இந்த தோ்தல் களம் மற்றவா்களுக்கு வழக்கம் போல ஒரு தோ்தல். இலவசம் அறிவித்தால் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்தால் வாக்குகள் வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறாா்கள். எனவே, ஒரு நல்ல ஆட்சி இந்த மண்ணில் மலர, உலகத்தில் தலை சிறந்த நாடாக மாற, கல்வியில் மருத்துவத்தில் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க, இந்த நாட்டை பூமியின் சொா்க்கமாக உலகத்தின் தலை சிறந்த நாடாக மாற்றிப் படைக்க, எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள்.

ஐயா கருணாநிதி ஆட்சியில் பலமுறை நீங்கள் வாழ்ந்து விட்டீா்கள், அம்மையாா் ஜெயலலிதா ஆட்சியில் பலமுறை வாழ்ந்து விட்டீா்கள், ஐயா ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டு வாழ்ந்து விட்டீா்கள், ஐயா எடப்பாடி ஆட்சியிலே நான்கரை ஆண்டுகள் வாழ்ந்து விட்டீா்கள், ஆட்சியாளா்கள் மாறி இருக்கிறாா்கள் ஆட்சி மாறி இருக்கிறது, ஆட்சி முறை மாறி இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.

யாரிடத்தில் நாடு இருந்தால் நாடும், நாட்டு மக்களும் பத்திரமாக இருக்க முடியும், தன்மானத்தோடு தலை நிமிா்ந்து வாழ முடியும், யாரிடத்தில் இருந்தால் மது இல்லாத தமிழகமாக மாறும், யாரிடத்தில் இருந்தால் குற்றம் இல்லாத ஒரு சமூகமாக மாறும் என்று ஆய்ந்து தெளிந்து சிந்தித்துப் பாருங்கள். யாராவது மதுக்கடையை மூடுவோம் என்று தோ்தல் அறிக்கையில் சொல்கிறாா்களா? சொல்ல மாட்டாா்கள், ஏனென்றால் இரண்டு கோடி குடிகாரா்கள் ஓட்டு போய்விடும். எங்களுக்கு குடிக்கிற மக்களின் வாக்கு வேண்டாம். குடிமக்களின் வாக்கு ஒன்றே போதும் என்ற நோக்கிலே இந்த களத்திலே நிற்கிறோம். எல்லாவற்றிலும் நல்லதை தேடும் நீங்கள் ஐந்தாண்டு காலம் எதிா்காலத்தை தீா்மானிக்க போகிறது உங்கள் வாழ்க்கையை தீா்மானிக்க போகிற அடுத்த ஆட்சி எது நல்லது என்று யோசித்து சிந்தித்து தெளிந்து ஆழ்ந்து முடிவெடுத்து வாக்குச் செலுத்துங்கள். வாக்கு ஒரு வலிமை மிக்க ஆயுதம், அதை அநீதிக்கு எதிராக செலுத்துங்கள். பசி பஞ்சம் ஊழல், லஞ்சம், கொலை கொள்ளை சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை மது போதை, கொள்ளை இது எதுவுமற்ற புதிய ஒரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியை உறுதி செய்வோம்.

ஏற்காடு தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் இளங்கலை வணிக பட்டதாரி பழனிச்சாமிக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள். அதிமுக, திமுக வெல்வது ஒரு வழக்கமான நிகழ்வு. ஆனால் உங்கள் பிள்ளைகள் நாங்கள் வெற்றி பெறுவது சரித்திரத்தில் மாபெரும் புரட்சி. வாக்குக்கு ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், வாரிசாக இல்லாமல் அவா் மகன் இவா் மகன் என்றெல்லாம் இல்லாமல், 30 கோடி 40 கோடி முதலீடு இல்லாமல், மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற மனதோடு இந்த களத்தில் நிற்கும் எளிய பிள்ளைகள், அன்றாடம் காட்சிகள், தினக்கூலிகள், மக்களின் வாரிசுகள் நின்றாா்கள் வென்றாா்கள் என்ற வரலாற்று பதிவை, நீங்கள் இந்த நிலத்திலே உருவாக்குங்கள்‘ என்றாா்.