பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
'உலகம் அனைத்தையும் கட்டி காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலைமன்றங்கள் யாவும் பெண்களே' என்றார் ஷேக்ஸ்பியர். 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...' என்பார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. 1954-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 'பெண்கள் பின் தங்கிய நிலையில் வாழுகின்ற எந்த நாடும் முன்னேறாது' என்று கூறியுள்ளார்.
'துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்... சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்... வம்பு செய்யும் குணம் இருந்தால் விட்டிட வேணும், அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் நீ!' என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இவ்வாறு பெண்களின் பெருமைகளை சான்றோர்கள், இலக்கியவாதிகள், தலைவர்கள் என்று பலரும் வியந்து பாராட்டுகின்றனர். வீடு, அரசு நிர்வாகம், அரசியல், கல்வி, விளையாட்டு, மருத்துவம் என்று பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதில், பெண்களுக்கே முதலிடம். பெண்களின் பெருமைகளைப் போற்றும் வகையில், உலக மகளிர் தினம் மார்ச் 8-இல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெண்களின் அன்றைய, இன்றைய நிலைமைகள் குறித்து ஆளுமைகள் சிலரிடம் பேசினோம்.
கவிதா ஜவஹர், பட்டிமன்றப் பேச்சாளர், விருதுநகர் உலகில் தோன்றிய ஆதிதாய் வழி சமூகம் பெண். தத்துவ மேதைகளாக, புரட்சியாளர்களாக, சிந்தனைவாதிகளாக ஆண்களே சித்தரிக்கப்படுகின்றனர். பூமியின் அடையாளங்களே பெண் குழந்தைகள். பெண் என்பவள் உருவாக்கி, அழகு பார்ப்பவள். அழகற்ற ஒரு பொருளையும்கூட மேலும் அழகு சேர்த்துப் பார்ப்பவள்.
மகளிர் தினத்தை ஆண்களும் கொண்டாட வேண்டும். இந்தத் தினத்தில் வெளியுலகுக்கு இருப்பவர்களையும் தேடிப் பிடித்து அழைத்துப் பேச வேண்டும். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னாலும் பெண் இருக்கிறாள். பணியிடங்களில் ஏற்றத் தாழ்வான நிலை பெண்களுக்கு உள்ள நிலை மாற வேண்டும்.
'குழந்தை கருவில் இருக்கும்போது, மிகவும் குள்ளமாக இருப்பாள்' என்று மருத்துவர்கள் சொன்னபோதும், அந்தக் குழந்தையை மிக நல்ல முறையில் வளர்த்து சாதிக்க வைப்போம் என்று பெற்றோர் கூறினர். அந்தக் குழந்தையைப் பிரசவித்து, வளர்த்து ஆட்சியராக்கி உள்ளனர். அவர்தான் மூன்றரை அடி உயரமுள்ள ஆர்த்தி டோக்கரா.
காற்று மாசுபாடு தவிர்க்கும் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் மெக்சிகோவுக்குச் சென்ற இந்தியப் பெண் வில்லட் ஓவியா. அதற்கு பெயர் வைக்க 'அனிதா சாட்டிலைட்' என்று பரிந்துரைத்தார். 'மண்ணில்தான் அந்தப் பெண் வாழவில்லை. விண்ணிலாவது வாழட்டும்' என்று வில்லட் ஓவியா சொன்னாள். நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கியவர்கள் வரலாற்றில் தொடர்ந்து சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்று பல சாதனை பெண்களை சுட்டிக்காட்ட இயன்றாலும், ஒவ்வொரு பெண்ணும் பல எல்லைக் கோட்டையும், வறுமைக் கோட்டையும் தாண்டியே ஜெயித்து மிளிர்கிறாள்.
'பெண்ணின் முன்னேற்றம்' என்பது அந்தக் குடும்ப முன்னேற்றத்தைத் தாண்டி, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றமாகும்.
'கல்வி கற்றவர்களிடம் கர்வம், பெருமிதம், கம்பீரம் அவசியம் இருக்க வேண்டும்' என்று ஓவியர் ரவிவர்மா அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார். திருமகளாகிய லட்சுமி செந்தாமரையில் செம்பட்டு உடுத்தி, கால்கள் வெளியே தெரியாவண்ணம் அமர்ந்திருப்பார். ஆனால், கலைமகளாகிய சரஸ்வதியோ வெண் தாமரையில் வெண்பட்டு உடுத்தி கால் மேல், கால் போட்டு அமர்ந்திருப்பார். இதற்கு ரவிவர்மா, 'செல்வம் படைத்தவன் என்றும் அடக்கமாக இருக்க வேண்டும்; கல்வி கற்றவன் என்றும் கம்பீரமாக இருக்க வேண்டும்' என்றார்.
முனைவர் அ.ரம்யா, வரலாற்று ஆர்வலர், தஞ்சாவூர் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் நிலைகளில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அதிகமாக்கப்பட வேண்டும். ஆணுக்கு நிகராகப் பெண்களும் பல பணிகளில் இருக்கின்றனர். ஆண்கள் உடல் வலிமையுடையவர் எனில், பெண்கள் அதிக மன வலிமை கொண்டவள். அதீத வலிகளை எதிர்கொண்டு பக்குவப்பட்டதனாலேயே மனவலிமையும் அவர்களுக்கு அதிகம். பெண்கள் ஆடையைத் தேர்வு செய்து அணிவதற்கே அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஓராண்டை ஒதுக்குவதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆண்டில் ஒரு நாள் மட்டும் மகளிரைக் கொண்டாடினால், போதாது. நாள்தோறும் சரியான வகையில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். பயணங்களில், அலுவலகங்களில் அவளுக்கு நெருக்கடியான சூழல் இருக்கிறது. பெண்ணின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்வது வெகு கடினம். பெண்களுக்கான விருப்பங்கள், ஆசைகள், ஏக்கங்கள் ஆண்டுக்கணக்கில் நீள்கின்றன. அவளின் ஒரே நோக்கம் தன் குடும்ப வறுமை நீங்கி மகிழ்ச்சியோடு வலம் வர வேண்டும்.
கற்பது மட்டுமே பெண்களுக்கு ஆபரணமாகிய அழகாகும். அந்தக் கற்றலை சரிவரப் பெற்றவர்கள் மிளிர வேண்டுமெனில், அவர்களுக்கு உரிய வேலையும் கிடைக்க வேண்டும். பல திறமைகளை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் லட்சியப் பெண்ணாக வலம் வரவேண்டும்.
ம.பாக்கியலட்சுமி, தன்னம்பிக்கை எழுத்தாளர், சென்னை ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7ஆயிரம் வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால், பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வார்த்தைகள் பேசுவார்கள். பேச்சில் வல்லமையுடையவர்கள் பெண்கள்.
பழமையான ரோம் கலாசாரத்தில், போர் வீரர்களின் உடலில் இருந்து வழியும் வியர்வையைச் சேகரிக்கும் பெண்கள் தங்கள் சருமத்தில் பூசி அழகுப்படுத்திக் கொள்வதோடு, வீரர்களின் உடைகளை அணிந்துள்ளனர்.
பெண்கள் தொழில்முனைவோராக மாறும்போது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அவர்கள் அரசியலில் பங்கேற்கும்போது, சமத்துவக் கொள்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இளம் பெண்கள் தங்களது கனவுகளைத் தைரியமாகத் தொடர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது குடும்ப அமைப்புகள், விரிவான , சமூக, பொருளாதார வரைவுச் சட்டங்கள், கலாசார, மதரீதியான மரபு ஆகியவற்றின் வழியாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது வாழ்வில் ஏதோ ஒரு வடிவிலான வன்முறையை அனுபவிக்கின்றனர். பெண்களின் சுதந்திரம் இப்போது உணரப்பட்டு விட்டது. அதை வெளிப்படுத்தி அனுபவிக்கும் எண்ணங்களும், செயல்களும் வளரத் தொடங்கிவிட்டது.
ராதிகா ஹரீஷ், அகில உலகத் தமிழ்ப்பள்ளி நிறுவனர், மலேசியா பெண்களைப் போற்றும் வகையில் அமையும் வெறும் வாழ்த்துகளுக்கான நாள் மட்டும் அல்ல. பெண் சமூகம் சிந்திக்கவும், மாற்றத்தை உருவாக்கவும் அழைக்கும் நாளாகவும் மகளிர் தினம் திகழ்கிறது. பெண்களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்துகிறது. வரலாற்றுப் போராட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை விதைக்கிறது.
காலம் காலமாய் அழிக்கப்பட்டு வந்த எண்ணங்கள், ஆசைகள், எழுச்சிப் பெற்று, ஒரு பெண்னே பல ஆண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு, அவளுக்கு வாய்ப்புகளை தானாகவே தேடிக் கொள்ள பெண்ணால் இப்போது முடிகிறது.
தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி என உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். இந்தப் பாத்திரங்களில் எதையும் நிராகரித்து எந்த ஆணாலும் வாழ்ந்து விட முடியாது.
நதிகள் தொடங்கி மலைகள் வரை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. பெண்கள் தங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தவறவிட வேண்டாம். தோல்வி வந்தாலும் தைரியமாக எழுந்து நிற்பதைக் கைவிட வேண்டாம். குரலின் வலிமையை அடக்க வேண்டாம்.
பெண்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சிக்கும் மனப்போக்கை மாற்றுவது அவசியம். பெண்கள் ஒன்றிணைந்தால், சமூகத்தில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும்.