முகப்பு
தமிழ்மணி

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!

நம் வாழ்வுக்கு அடிப்படையாய் நம்மைச் சூழ்ந்திருக்கிற வளமான இயற்கை நிலையே சுற்றுச்சூழல் என்பது.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:32 PM
சித்தரிக்கப்பட்டது
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:29 PM

முனைவர் மு.இரா. தேவகி

நம் வாழ்வுக்கு அடிப்படையாய் நம்மைச் சூழ்ந்திருக்கிற வளமான இயற்கை நிலையே சுற்றுச்சூழல் என்பது. தனிமனிதனிலிருந்து விலங்கு வரை விரிந்து நிற்கும் சுற்றுச்சூழல் இயற்கைச்சூழல், செயற்கைச்சூழல் என இரு வகைப்படும்.

மலை-காடு நீர்நிலைகள்- நிலம் இவற்றில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைச் சுற்றுச்சூழல். பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள். நிலத்தை மலை-வயல்-காடு-கடல் என நான்காகப் பிரித்து நிலத்துக்கேற்ற பயிர்களை வளர்த்து உயிர்களைக் காத்தவர்கள்.

Advertisement

'மண் திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தை வரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்தியற்கை யை' (புறம்-2)

நன்கறிந்தவர்கள். குறிப்பாக நீரின் தேவையை

முழுமையாய் அறிந்தவர்கள்.

'நீரின்றமையா யாக்கை', 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே', 'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' என ஆக்கவும்-அழிக்கவுமான சக்தியாம் மழையைப் போற்றினர். சிலப்பதிகாரம் திங்கள்-ஞாயிறு-மாமழை என இயற்கையைப் போற்றுகிறது.

மேகம் கடலிலிருந்து பெற்றுத் தருவதே மழை என்ற அறிவியலைத் தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். எனவே, அதை அமிழ்தம் எனப் போற்றினர்.

'நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்' (தொல்.பொருள்.635)

என்றார் தொல்காப்பியர். மழை இல்லையேல் நன்னிலமும் வன்னிலமாகும் (பாலை) என்பதை நம்மவர் உணர்ந்திருந்தனர். எனவே,

'நிலம் நெளி மருங்கின் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே' (புறம்-18)

என்று நீரைச் சேமிக்க வைக்கவும் உணர்த்தினர். பழங்காலத்தில் ஊருணி, கிணறு, குளம், ஏரிகள் ஆகியன மழை நீர் சேமித்துவைக்கப் பெற்ற இடங்கள் ஆகும்.

'செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்' (குறள்-637)

என்றார் வள்ளுவர். இயற்கை நமக்களித்த வரம் மரம். தட்பவெப்ப நிலையை உருவாக்குதலிலும் காற்று மண்டலத்தில் பிராண வாயுவைச் சரியான விகிதத்தில் நிலைநிறுத்தவும் மரங்கள் அவசியம்.

மழைப் பொழிவைச் சீர்படுத்த மண்ணழிவிலிருந்து காக்க இன்றியமையாதன மரங்கள். ஆலமரம், வேப்பமரம், தேக்குமரம் போன்ற பயன்மரங்கள் - மருந்து மரங்கள் உணவுப் பொருள்கள் போன்றன தரும் காடுகள் போற்றப் பெறுதல் வேண்டும்.

காற்றின் இயக்கம் உணர்ந்த தமிழன் கடுவளி, சூறாவளி, கொண்டல், கோடை, வாடை, தென்றல் என்று காற்றின் விசையுடன்- வகையும் உணர்ந்தவன். வாடைக் காற்றை வைத்தே 'நெடுநல்வாடை' எனும் இலக்கியம் கண்டவன். மண்ணையும் விண்ணையும் இணைக்கும் அதிசய சக்தியாம் மரத்தை வளர்க்கும் வகையும் காக்கும் வகையும் இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளன. வான நூலறிவு பெற்றவன் தமிழன்.

'செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்று பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டலமும்

வளி திரிதரு திசையும்' (புறம்-30)

என்ற பாடல் இதை உணர்த்தும்.

'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாய்கு'

என்று திருமுருகாற்றுப்படையும் மொழியும். வாரத்தின் ஏழு நாள்களுக்கும் கோள்களின் பெயர்களே நம்மிடையே வழக்கில் உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பேசப்படும் இரைச்சல் ஒலி பற்றியும் நம் இலக்கியங்கள் கூறியுள்ளன.

'பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாது உண் பறவை பேதுறலஞ்சி

மணி நாவார்த்த மாண்வினைத் தேரன்' (அகம்-4)

என்னும் பாடல் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துவதாகும்.

'குறுந்தொகை' பல்வேறு மரங்களையும் வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்களையும் எண்ணற்ற பறவைகளையும் விலங்குகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது.

சுனை, மலை, நிலம், கொம்பு எனப் பல்வேறிடங்களில் பூத்த 99 வகையான மலர்களை குறிஞ்சிப் பாட்டு குறிக்கிறது. மலை படுகடாம் தினையறி தாளில் விளையும் அவரை - ஐவன வெண்ணெல் அறையுறு கரும்பு- சோலை- வாழை- மா- பலா கருங்கனி நாவல் எனக் கணக்கற்ற மரங்களையும் அது குறிக்கிறது.

'இயற்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. ஆனால், பேராசைகளை அல்ல' என்றார் மகாத்மா காந்தி. மலர்களைச் சிதைக்காமல் வண்டுகள் தேன் எடுப்பதுபோல் இயற்கையைச் சிதைக்காமல் அதன் வளத்தைப் பெற வேண்டும்; இயற்கையைப் பாதுகாக்கவும் வேண்டும்.

மனிதன் இல்லாமல் இயற்கை செழிக்கும்; ஆனால், இயற்கை இல்லாமல் மனிதன் செழிக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.