நதிநீர் இணைப்பு - பகீரத முயற்சி!
நாம் அனைவரும் வளமுடன் வாழ வேண்டுமானால் இருக்கும் நீராதாரங்களைப் பாதுகாத்தும் மேம்படுத்தியும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
எனது சமீபத்திய லடாக் பயணத்தில், அழகிய பனிபடர்ந்த மலைகள் சூழ்ந்திருக்க சிந்து நதியின் கரையில் அமைதியாக அமர்ந்திருந்தேன். சிந்து நதி குளுமையாக சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற சிந்தனையை சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மகாகவி பாரதி பாடி வைத்திருக்கும் பாடல் வரிகள் நதியின் பிரவாகத்தைப் போல மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
'சிந்து நதியின்மிசை நிலவினிலே
Advertisement
Advertisement
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்'
என்று தேச ஒற்றுமையைக் கொண்டாடிய மகாகவி, 'வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என்று நதிகளை இணைப்பதைப் பற்றிக் கனவு கண்டார். அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே எனது கனவும் ஆகும்.
உலக நிலப்பரப்பில் பாரதத்தின் நிலப்பரப்பு 2.4% மட்டுமே, ஆனால், உலக மக்கள்தொகையில் 18% பேர் இந்த மண்ணில் வாழ்கிறோம். உலகின் நல்லநீர் ஆதாரத்தில் 4% மட்டுமே பாரதத்தில் இருக்கிறது. இதற்குள் நாம் அனைவரும் வளமுடன் வாழ வேண்டுமானால் இருக்கும் நீராதாரங்களைப் பாதுகாத்தும் மேம்படுத்தியும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும்.
நீராதாரங்களைப் பாதுகாக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பாதுகாப்பான குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன் கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் பல முன்னெடுப்புகள் நீர்வளத்தை மேம்படுத்தி வருகின்றன.
நீர் சேமிப்புக்கான வடிவமைப்புகளை ஜல் சக்தி அமைச்சகம், விவசாயிகளிடம் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு, எட்டு மாதத்தில் பத்து லட்சம் நீர்சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்தது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 27 லட்சம் நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது இலக்கைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த சாதனையைப் பற்றி பிரதமர் தனது 'மனதில் குரல்' உரையில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
கிராமங்களை அதிகம் கொண்டுள்ள பாரதத்தில் விவசாயத்துக்கு மட்டும் 83% நீர் பயன்படுத்தப்படுகிறது. எனில், விவசாயத்துக்கான நீர்ப்பாசன முறைகளை நவீனப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதே சமயம், பாரதத்தில் ஒருபுறம் பெரும் வெள்ளப் பெருக்கால் நதிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மறுபுறம் வறட்சி நிலவுகிறது. நீர்ப் பகிர்வை நாடு முழுவதும் சமன்படுத்தினால் இந்த நிலையை மாற்றி அமைக்கலாம். அதற்கு நதிகளை இணைப்பது அவசியமாகிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் எனக்கு (கட்டுரையாளர்) நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 1970-களில் கேப்டன் தஸ்தூர் 'பூமாலைத் திட்டம்' என்ற பெயரில் நதிநீர் இணைப்பு அறிக்கை ஒன்றை அளித்தார். அதை மனதில் கொண்டு வாஜ்பாயிடம் தொடர்ந்து நதிநீர் இணைப்பு குறித்து பேசிக் கொண்டிருப்பேன். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வதுடன் அதற்கான வாய்ப்பு வரும் என்று நம்பிக்கையும் அளிப்பார்கள். நதிகள் இணைப்புக்கான முயற்சிகளையும் அப்போதே தொடங்கினார்கள்.
சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைத்தார். முதலில் 14 ஹிமாலய நதிகள் இணைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், 16 தீபகற்ப நதிகளையும் இணைக்க வேண்டும். பின்னர், இந்த இரண்டையும் சேர்த்து இந்திய நதிகளை இணைப்பது குறித்தும் ஆய்வு அறிக்கைகள் வந்தன. மொத்தத்தில் முப்பது நதிகள் இணைக்கப்படும்.
இந்தக் கனவுத் திட்டமான நதிகள் இணைப்பை வலியுறுத்தி 2004-க்குப் பிறகு ரத யாத்திரையும் மேற்கொண்டேன். தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணிக்கும்போது நதிகள் இணைப்பு எனும் கனவு நனவாகும் நம்பிக்கை ஏற்படுகிறது. குஜராத்தின் கட்ச் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத் தன்மை நர்மதா திட்டத்தால் மாறியிருப்பதைக் கண்டேன்.
மகாராஷ்டிரத்தில், தண்ணீர் பயன்பாட்டில் விழிப்புணர்வும் நுட்பமான அணுகுமுறைகளையும் ஏற்படுத்தியதால் மாற்றங்கள் வந்துள்ளன. சிக்கிம் நீர்மின் உற்பத்திக்கான பணிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.
இமாலயத்தின் பிரம்மபுத்ரா நதியின் உபரி நீர் கங்கையை வந்தடைய, மனாஸ்- சங்கோஸ் - தீஸ்தா இவற்றுடன் கங்கையை இணைக்கவும் கங்கை - தாமோதர் - ஸ்வர்ணரேகா - மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி - வைகை - குண்டாறு என்று நாடு முழுவதும் நதிகள் இணைப்புக்கான வழிமுறைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
30 நதிகள் இணைப்பின் ஒருபகுதியாக கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ. 44,605 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு நதிகளையும் இணைக்கும் திட்டத்தின் மூலம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அதன் அண்டை மாநிலங்களில் 9.8 லட்சம் ஹெக்டேர் பாசன வசதியும், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீர் வசதியும், 103 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரியமின் உற்பத்தியும் உறுதிப்படுத்தப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பலன் அடையும். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள புத்தல்கண்ட் பகுதி இந்தத் திட்டத்தால் மிகுந்த பலன் அடையும்.
மேலும், தமங்கங்கா-பிஞ்சல், பார்-தாபி-நர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி ஆகிய ஐந்து நதி இணைப்புகளின் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த நதிநீர் இணைப்பை காவிரி வரை இல்லாமல் வைகை, தாமிரபரணி, நம்பியாறு, கன்னியாகுமரி மாவட்டத்தின் கருமேனியாறு வரை நீட்டித்துவிட்டால் பாரதம் முழுமைக்குமான நீராதாரம் வலுப்படும். கங்கை குமரியை வந்தடையும்.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகப்படியான வெள்ள நீரைக் கொண்டுள்ள மாநிலங்களிலிருந்து பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதன் மூலம், மேற்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் இல்லாமல் போகும்; தீபகற்ப மாநிலங்களில் வறட்சியும் பஞ்சமும் மறையும். வெள்ளம் வறட்சி இவற்றுக்கான பலஆயிரம் கோடி செலவினங்களும் நஷ்டமும் தவிர்க்கப்படும். சுமார் இரண்டரை கோடி ஹெக்டேர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும்.
தேசத்தின் வளத்தைப் பெருக்கும் இந்தத் திட்டங்களுக்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம். நதிநீர் மேலாண்மை மாநிலங்களின் கைகளில் இருக்கிறது. இந்த நேரத்தில் தேசம், தமிழகத்தில் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாபெரும் மனிதரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
காளிங்கராயன் என்னும் பட்டப்பெயர் கொண்ட லிங்கய்யக் கவுண்டர் என்ற கொங்கு நாட்டுக் குறுநில மன்னர். 700 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் ஈரோடு மாவட்டத்தின் நீர் வளத்தை உறுதி செய்து கொண்டிருக்கும் காளிங்கராயன் அணையைக் கட்டிய மாமனிதர்.
காளிங்கராயன் 13-ஆம் நூற்றாண்டில் இந்த அணையை தனது சொந்த செலவில் கட்டினார். விவசாயப் பணிகளுக்கான நீராதாரத்தை நிலைப்படுத்த இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கி.மீ.) ஆகும். பவானி, காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்குத் திருப்பி விடப்பட்டது. வாய்க்காலில் நீர் 56 மைல்கள் பயணித்து நொய்யல் ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் சேர்கிறது. இடையில் மூன்று ஓடைகளைக் கடந்து செல்கிறது.
அணையிலிருந்து விவசாயத்துக்கு நீர் வழங்கும் வாய்க்கால்களும் அதிகபட்சமாகப் பயன்தர வேண்டும் என்ற நோக்கில் நேர்கோட்டில் இல்லாமல் பல கிராம மக்களுக்கும் வாழ்வளிக்கும் வகையில் வளைந்து வளைந்து செல்வதால் இதைக் கோண வாய்க்கால் என்றே சொல்லுவார்கள். 15,743 ஏக்கர் நிலங்கள் இன்றைக்கும் பாசன வசதி பெறுகின்றன.
சுயநலம் இல்லாமல் காலம் கடந்தும் மக்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட காளிங்கராயரைப் பற்றி தமிழில் பல தனிப் பாடல்கள் இருக்கின்றன. கொங்குமண்டல சதகம்,
காவிரி யோடு கலக்குறு பவானியைக்
கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி
புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாணர் எல்லாந்
தினமகிழ
மாவிசயம்பெறு காளிங்கனும் கொங்கு
மண்டலமே
என்று காளிங்கராயரைக் கொண்டாடுகிறது. காவிரி நதியுடன் கூடும் பவானி நதியில் அணை கட்டிப் பாசனம் செய்து அதன் கால்வாய் நீர் காஞ்சி ஆற்றில் விழும்படிச் செய்தவரும் தேவர்களும் , புலவர்களும், சமூகத்தின் மக்களும் மகிழும்படி செய்த வெற்றியாளரான காளிங்கராயன் என்பவரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே என்பது இந்தப் பாடலின் பொருள்.
இன்று வரை அவரது சந்ததிகள் எவரும் இதனால் பயன் பெறவில்லை. தேசமே முதன்மையானது என்ற சிந்தனையுடன் காளிங்கராயன் கொண்டிருந்த சேவை மனப்பான்மையே இன்றைக்கும் நடைமுறை அவசியம். அப்போதுதான் நதிகள் இணைக்கப்பட்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரதம் வளத்துடன் வளரும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.