புராதனம் புதிய வாழ்வளிக்கும்
கருவிகளில் உலகம் கிடைக்கும் என்று நாம் நம்பியதே அடுத்த தலைமுறையின் சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

உலகம் உள்ளங்கைகளுக்குள் வந்து விட்டது என்றும் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்றும் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கருத்தில் உண்மை இருக்கிறதா? இருக்கலாம். அப்படி உலகம் உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டதால் நமக்கு என்ன நன்மை?
இந்தக் கருத்து உண்மை எனில் நாம் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். நம் முன்னோர்களைவிட சிறந்த வாழ்க்கையை நாம் அடைந்து விட்டோமா? நம் பாட்டிகளும் தாத்தாக்களும் பெற்றிருந்த வசதியைவிட நாம் வசதியான வாழ்க்கையை வாழ்கிறோம். அவர்களைப் போல நிம்மதியுடனும் நிறைவுடனும் வாழ்கிறோமா?
இந்தக் கேள்விக்கு, 'ஆம்' என்று அனைவராலும் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது. நம் மனதில் பலவிதமான அழுத்தங்கள் இருக்கின்றன. இதில் ஏழை பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என எவரும் விதிவிலக்கு இல்லை. ஏன் இந்த நிலை? வசதியான வாழ்க்கையை நாம் அடைந்த பிறகு ஏன் ஆனந்தமும் அமைதியும் நிம்மதியும் இன்னும் கேள்விக்குறியாக நிற்கிறது? நம் முன்னோர்களுக்கும் நமக்கும் இடையில் இருக்கும் இந்த வேறுபாடுக்குக் காரணம் யாது?
Advertisement
Advertisement
நம் முன்னோர்களுக்கு நம்முடைய மண்ணின் பலமும் கலாசாரத்தின் மதிப்பும் தெரிந்திருந்தது; நமக்குத் தெரியவில்லை. அதுதான் அடிப்படை வேறுபாடு. நம் குடும்பங்களில் முன்னர் ராமாயணம், மஹாபாரதக் கதைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. குடும்பத்தில் தாங்க இயலாத கஷ்டம் ஒரு பெண்ணுக்கு வரும்போது சீதையின் கஷ்டத்தை, தமயந்தியின் துன்பம் நிவர்த்தியான வரலாறுகளைச் சொல்லும் போது துன்பம் தீரும் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஆண்கள் பெரும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பாண்டவர்களின் கதையைச் சொல்லி எத்தனை சங்கடங்கள் வந்தாலும் தர்மத்தின் பாதையில் நடந்தால் தெய்வம் நமக்குத் துணை நிற்கும் என்று வழிகாட்டப்பட்டது. அவர்களும் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டார்கள்.
பகவான் கிருஷ்ணரின் கதை தெரியாத குழந்தைகள் பாரதத்தில் இருந்ததுண்டா? குழந்தைகள் கேட்கும் முதல் கதை கிருஷ்ணரின் கதையாக மட்டுமே இருந்தது. இந்தக் கதைகள் வெறும் கதைகள் அல்ல; அவை நமது ஆளுமையை வடிவமைக்கும் சக்தி கொண்டவை; நம் மண்ணின், கலாசாரத்தின் வேர்கள்; அவை நம்மைத் தாங்கிப் பிடித்தன.
அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட இறைவன் வருவார் என்ற சிந்தனை மக்களை தர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கச் செய்தது. குறிப்பாக, குழந்தைகள் சிறு வயதிலேயே நேர்மை, தன்னம்பிக்கை, கடமை உணர்வு, அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.
விஷ்ணுவின் பூரண அவதாரமான கிருஷ்ணர், தர்மத்தை நிலைநாட்டவும், அறவழியில் நடப்பவர்களைக் காக்கவும் பூமியில் அவதரித்தார் என்ற எண்ணம் தீமையின் வழியில் நடந்தால் இறைவனின் கோபத்துக்கு உள்ளாவோம் என்ற பயத்தைத் தந்தது. பேராசைப்படுவதும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதும் குற்றம் என்ற உணர்வு மஹாபாரதக் கதையையும் கிருஷ்ணரின் அவதார பெருமையையும் கேட்டு வளர்ந்தவர்களுக்கு இருந்தது.
நாம் சறுக்கிய இடம் இதுதான். உலகம் உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்ட உற்சாகத்தில் நம் கையில் இருந்த பொக்கிஷத்தைத் தவற விட்டுவிட்டோம். அதனால் நம் குழந்தைகளை வழிநடத்துவதற்கான வழி நமக்குத் தெரியவில்லை. கையிலிருக்கும் உலகத்தைக் காட்டும் கருவியின் உதவியால் வழிதேடத் தலைப்படுகிறோம்.
அதைப் பார்க்கும் நம் குழந்தைகள் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு அதில்தான் இருக்கிறது என்று நம்புகிறார்கள். எல்லா வழிகாட்டுதல்களும் சரியானது என்று தீர்மானிக்கிறார்கள். தவறான பாதைகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள்.
கருவிகளில் உலகம் கிடைக்கும் என்று நாம் நம்பியதே அடுத்த தலைமுறையின் சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அவர்களை மீட்கவும் தெரியாமல் நாம் தவிக்கிறோம். அதனால் நிம்மதி இழக்கிறோம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில் அடுத்த தலைமுறை நிற்கிறது.
உலகளாவிய பார்வை என்ற எண்ணத்தில் வாழ்க்கையில் வெற்றி என்பது செல்வத்துடன் வாழ்வது என்ற மேலைநாட்டுப் புரிதலை வளர்த்துக் கொண்டு விட்டோம். அதன் விளைவு பணத்தை சம்பாதிப்பது மட்டுமே வாழ்வின் லட்சியம் என்று இளைய தலைமுறை ஓடுகிறது.
உண்மையில், நம்முடைய கலாசாரத்தில் அனைத்தையும் சம்பாதிக்கும் மனிதரல்ல வெற்றியாளர், அனைத்தையும் துறக்கத் தெரிந்தவரே வெற்றியாளர். அதனால்தான் அரசர்களும் பெரும் செல்வந்தர்களும்கூடத் துறவிகளைப் பணிந்தார்கள். துறவிகள், அறத்துடன் வாழ்ந்து காட்டி நம்மையும் அறத்தின் பாதையில் வழிநடத்தினார்கள்.
குடும்பத்தின் பெரியவர்கள் நம்மை தர்மமே உயர்வான வாழ்க்கை முறை என்று நெறிப்படுத்தினர். இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்குத் தெரிந்த முதிய பெண்மணி ஒருவர் தன்னுடைய பிள்ளைகளிடம் கூறிய அறிவுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். குளிர்சாதனப் பெட்டிகள் வீடுகளில் அறிமுகமாகத் தொடங்கிய காலம். அப்போது, வயது முதிர்ந்த குடும்பத்தின் மூத்த பெண்மணி தன் வீட்டுப் பெண்களிடம் குளிர்சாதனப் பெட்டிகளைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தினால் உணவுப் பொருள்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்றும், இதனால் செலவு மிச்சப்படும் என்றும் பாட்டிக்கு குளிர்சாதனப் பெட்டியின் பயன்களை மற்றவர்கள் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயன்றார்கள்.
அனைத்தையும் கேட்டுவிட்டு பாட்டி பதில் சொன்னார்- 'பொருள்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொள்வதன்மூலம் அவற்றை மறுநாள் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். ஆனால், அங்கே தர்ம சிந்தனை கெட்டுப் போகிறது. நம்மிடம் இருப்பதை நம்மை நம்பி இருக்கும் எளிய மக்களுக்குக் கொடுக்க வேண்டும். யாசகம் வழங்க வேண்டும் போன்ற எண்ணங்கள் மறைந்து, இருப்பவை அனைத்தையும் நானே முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல சிந்தனை வளர்ந்து விடும். அதனால், குளிர்சாதனப் பெட்டி நமக்கு எந்தக் காரணத்துக்காகவும் அவசியமற்றது' என்று வலியுறுத்தினார்.
இத்தகைய தர்ம சிந்தனையை கற்றுக் கொடுக்க நமக்கு இன்று யாருமில்லை. இருந்தாலும் நாம் அவர்களைக் கேட்பதும் இல்லை. நம்முடைய அறிதிறன்பேசி உலகில் எந்த மூலையில் என்ன பொருள் கிடைத்தாலும் அதை நமதாக்கிக் கொள்ள வழி சொல்கிறது. ஆசையே துன்பத்துக்குக் காரணம், பேராசை பெருநஷ்டம் போன்ற நம் தேசம் கற்பித்த விழுமியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கருவி காட்டும் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம். ஆசை பூதாகரமாக வளர்ந்து திருப்தி என்ற உணர்வைக் கொன்று நம்மை எந்த நேரமும் பொருளுக்கான ஏக்கத்தோடும் தேடலோடும் வைத்து பதற்றத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் பதற்றம் மனநோயாக வளர்கிறது.
நிம்மதியும் தூக்கமும் இழந்து 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று அலைய வைக்கிறது. பொறுமை, விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்ற நற்பண்புகள் தொலைந்து பொறாமை போன்ற தீமைகளை வளர்த்து கூடி வாழ்வதை மறந்து தனிமையின் பள்ளத்தில் அழுத்துகிறது.
இந்த நிலையிலிருந்து விடுபட்டு நம் முன்னோர் வழியில் நாமும் நிம்மதியான சிறப்பான வாழ்வை வாழ நம் கலாசாரத்தின் வேர்களை நாட வேண்டும். மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் வழங்கிய மிக முக்கியமான உபதேசங்களில் ஒன்று கர்ம யோகம்- 'கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன'. அதாவது, உனக்குச் செயலைச் செய்வதற்கு மட்டுமே உரிமை உண்டு அதன் பலன்களில் உரிமை கிடையாது.
நாம் செய்ய வேண்டிய கடமைகளை முழு ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும் என்பதே இதன் சாரம். செயலின் முடிவுகளைப் பற்றிய கவலையைவிட, மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தச் சிந்தனை குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. தேர்வு மதிப்பெண்கள் அல்லது வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், படிப்பதிலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கம் கொள்வார்கள்.
பிருந்தாவனத்தில் கண்ணன் அங்குள்ள மக்களிடம் காட்டிய பரிவையும், மக்கள் கண்ணனிடம் காட்டிய அன்பையும், கிருஷ்ணர் ஏழு நாள்கள் தனது சுண்டுவிரலில் கோவர்த்தன மலையைத் தாங்கி நின்ற வரலாறு காட்டுகிறதே அதை நம் பிள்ளைகள் அறிந்து கொள்ளும்போது பொதுநலமும் அன்பான மனதும் கூடிவாழ்வதன் மகத்துவமும் புரியும். இப்படி நம் புராணங்களின் இதிகாசங்களின் ஒவ்வொரு நிகழ்வும் செய்தியும் நல்வாழ்க்கைக்கு திசை காட்டும்.
தேடும் போது தெளிவு கிடைக்கும் என்பார்கள். நாம் தெளிவைத் தேட வேண்டிய தருணம் வந்துவிட்டது. கையில் இருக்கும் கருவி உலகத்தைக் காட்டலாம்; வாழ்க்கையைக் காட்டாது என்ற புரிதலுடன் 'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்ற சிந்தனையுடன் நமது பழம்பெரும் இதிகாசங்களையும் புராணங்களையும் எந்த முன்முடிவுகளும் இல்லாமல் கற்க வேண்டும். அப்போது, ஆழ்ந்து கிடக்கும் அறியாமையிலிருந்து மீண்டு சிறந்த ஆளுமைகளாக அடுத்த தலைமுறை வளரும். வாழ்க்கைக்கான வாசல்கள் திறக்கும்.