பார்வைக்கு அப்பால் ஒரு பார்வை...
வாழும் நாளில் கருணையைப் பொழிந்த நம் கண்களுக்கு, நாம் மறையும்போது, இன்னொரு உடலைப் பரிசளித்துச் செல்வோம்!

சென்னை பல்லாவரத்தில் உள்ள 'ஆனந்த ராகம் பார்வையற்றோர் இசைக்குழு' நடத்திய சமத்துவ தீபாவளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நான் (கட்டுரையாளர்) அழைக்கப்பட்டிருந்தேன். எளிமையான விழா. இந்த நிகழ்ச்சியின்போது பார்வை மாற்றுத் திறனாளிகளின் இசைத் திறமையைக் கண்டு வியந்து போனேன். அவர்கள் அருமையாகப் பாடினார்கள். ஏன் இவர்கள் பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தார்கள்? அந்தக் குறைபாட்டை ஈடுகட்ட இந்தக் குரல் வளத்தை இயற்கை கொடுத்துள்ளதோ? என்று தோன்றியது.
மின் ரயிலில் பயணம் செய்யும் போது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பாடிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் சில்லறை நாணயங்களை வழங்குவார்கள்; பலர் மெüனம் காப்பார்கள். நிலையம் வந்தவுடன் அவர்கள் இறங்கிப் போகும் போது அவர்களின் மீது இருந்த பச்சாதாபமும் நம் மனதில் இருந்து இறங்கிப் போகும். ஆனால், அந்த விழாவின்போது அவர்களுடன் நான் நிறைய நேரம் இருந்ததால், என்னுள் ஒரு பெரிய சிந்தனை தோன்றியது. அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். பாடும் போது லயித்துப் பாடுகிறார்கள். இசைக் கருவிகளையும் வாசிக்கிறார்கள். ஒன்று மட்டும் புரிந்தது; சமூகம் அவர்களைக் கைதூக்கிவிட்டால் அவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள்.
இந்த இசைக் குழு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் தினமும் பாடுகிறார்கள். யாராவது கருணையுடன் பணம் போடுகிறார்கள். அவர்களாக வாய் திறந்து யாசிப்பதில்லை; வெறுமனே பாடுகிறார்கள். பல்வேறு மேடைகளிலும் அழைத்தால் இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இந்த நிகழ்வை முன்னெடுத்த லதா குடும்பத்தினர், அனந்தராமன் ஆகியோரைப் பாராட்ட வேண்டும். இவர்களின் நல்வாழ்வுக்காக இந்த நிர்வாகிகள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக பலரிடம் உதவி கோருகிறார்கள்.
Advertisement
Advertisement
கண்களால் உலகைக் காண முடியாவிட்டாலும், தங்கள் மனக் கண்களாலும், அசைக்க முடியாத நம்பிக்கையாலும் வாழ்க்கையை வென்று காட்டுகிறார்கள். பார்வையின்மை என்பது ஒரு மனிதனின் லட்சியத்துக்கோ, திறமைக்கோ எக்காலத்திலும் முற்றுப்புள்ளி வைக்காது என்பதை தடைகளை முட்டித் தகர்த்துவிட்டு சாதிக்கிறார்கள்.
இயற்கையின் அழகையும், உறவுகளின் முகங்களையும், வண்ணங்களையும் அறியாதவர்கள். தான் எப்படி இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. கண்கள் இல்லாதவர்கள் கனவுகள் இல்லாதவர்கள் அல்ல; அவர்களுக்கும் பார்வை உண்டு; அது நம்பிக்கையின் பார்வை; அறிவின் பார்வை; வாழ்வின் மீதுள்ள பிடிப்பின் பார்வை. சமூகம் அவர்களைப் புரிந்துகொண்டு தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் குறைக்க வேண்டும். சாலைகளைக் கடப்பதிலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் அவர்களுக்குச் சிரமம் இருக்கக் கூடாது.
பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் வழிகாட்டுதலில் உள்ள குறைபாடு களையப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களிலும், பணியிடங்களிலும் போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மேலும், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தகவல்களைப் பெறுவது எளிதாக்கப்பட வேண்டும்.
பொதுச் சாலைகளில் தடையற்ற நடைபாதைகள், ஒளிச் சைகைகளுடன் கூடிய போக்குவரத்து விளக்குகள், பிரெய்லி அறிவிப்புகளை அணுக ஏதுவாக இணையதளங்கள், சமமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு கணக்கெடுப்பின்படி முழுமையான பார்வையற்றோர் இந்தியாவில் 80 லட்சம் வரை இருக்கிறார்கள். மிதமான குறைபாடு உள்ளவர்களையும் சேர்த்தால் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி ஆகும். ஆகவே, இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் முன்பு கண்களை உறவினர்கள் தானம் செய்தால் இரண்டு பேருக்கு ஒளி கிட்டும்; இருண்ட வாழ்வில் வெளிச்சம் கிட்டும்.
பொதுவாக பலர் நினைப்பதைப் போல முழு விழிப் பந்தையும் யாருக்கும் பொருத்துவதில்லை. கண்ணின் முன்பகுதியில் உள்ள வெளிப்படையான விழிவெண் படலம் (கார்னியா) மட்டுமே எடுக்கப்படும். இதற்கு வயது வரம்பு இல்லை. கண்ணாடி அணிந்தவர்களும் தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் தானம் செய்யலாம். இதனால், முக அமைப்பில் எவ்வித மாற்றமோ, விகாரமோ ஏற்படாது. கண்களைத் தோண்டி எடுத்து விடுவார்கள்; அங்கே குழியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு பலரும் கண் தானம் செய்ய முன்வருவதில்லை. எரிக்கப் போகிற அல்லது புதைக்கப் போகிற உடல்தானே? அந்த உறுப்புமூலம் ஒருவருக்கு வாழ்க்கை தரப் போகிறோமே என்ற எண்ணம் வேண்டும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சில குடும்பங்களில் பெரியவர்கள்தான் இறந்தபிறகு தன் கண்களைத் தானம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்கள்; ஆனால், அவர்களின் வாரிசுகள் அந்த துக்கத்திலும், அவசரத்திலும் அதை மறந்து விடுவார்கள்.
கண் தானம் குறித்து மதத் தலைவர்களும், சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆளுமைகளும் உறுதிமொழி எடுப்பதுடன் அது குறித்துப் பொதுமேடைகளில் எடுத்துச்சொன்னால் நல்ல பலன் கிட்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கண் தான உறுதிமொழிப் படிவங்களை வழங்கி மக்களைப் பதிவு செய்யவைக்கலாம். குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; தற்போது இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கண் வங்கிகளின் தொடர்பு எண்கள் மக்கள் மனதில் பதிய வேண்டும். அதற்கு மயானங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விழிப்புணர்வுப் பலகைகளை வைக்கலாம். 'நம் இறப்புக்குப் பின்னும் நம் கண்கள் வாழட்டும்' என்று நாம் ஒவ்வொருவரும் கருத வேண்டும். இது போன்ற இசைக் குழுவினரின் திறமைகளைக் காணும் போது இவர்களைக் குறித்து வெறுமனே பச்சாதாபப்படுவதோ, சிறு பொருள் உதவி செய்வதோ அவர்களின் வாழ்க்கையை உயர்த்தாது என்று புரிந்து கொண்டேன். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே இரக்கப்படுவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை கலைத் துறையிலும், சமூகத்திலும் உயர்த்த நாம் அனைவரும் மனமுவந்து முன்வர வேண்டும். ஒரு சில ஆயிரங்கள் நன்கொடை அவர்களுக்குப் போதாது.
கோயில் விழாக்கள், திருமண நிகழ்வுகள், பள்ளி - கல்லூரி இசை நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும். திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை நல்கலாம். பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் அவர்களை அறிமுகப்படுத்தி விட்டால், வாய்ப்புகள் வந்து அவர்கள் வாசலைத் தட்டும். குரல் வளம் சிறப்பாக இருப்பவர்களை நாம் கைதூக்கி விடலாம்.
முன்னணி நடிகர்கள் பலரும் திரையில் பார்வை இல்லாதவர்களாக நடித்திருக்கிறார்கள். திரையில் நடிப்பவர்கள் விழியற்றவர்களின் புனர்வாழ்வுக்காக பல நற்செயல்களை முன்னெடுக்கலாம். பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
எண்ம மற்றும் பிரெய்லி இசைப் பயிற்சி மையங்களைத் தொடங்கலாம். பார்வை சவால் உள்ளவர்கள் சுயமாகப் பாடல் பதிவு செய்யவும், இசைத்தொகுப்பு செய்யவும் பயன்படும் தொழில்நுட்ப செயலிகள் பற்றிய பயிற்சிகளை இலவசமாக வழங்கலாம்.
அவர்கள் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தவும், சொந்தமாக மியூசிக் பேண்ட் தொடங்கவும் தேவையான கடன் வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கலாம்.
பள்ளிகளும், கல்லூரிகளும் அவர்கள் குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்விச் சலுகையை அளிக்கலாம். அவர்களின் சொந்தப் பாடல்களுக்கு முறையான காப்புரிமை பெறவும், இசைத் தளங்கள்மூலம் அவர்களுக்கு நிலையான வருவாய் கிட்டவும் வகை செய்யலாம்.
அவர்கள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமுள்ள கலைத் திறமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. எந்த ஓர் அவயமும் நன்றாக இருக்கும்வரை அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. இழப்பு ஏற்பட்ட பின்னரே உணர்ந்து தவிக்கிறோம். பிறக்கும்போதே பார்வை இல்லாமல் பிறந்து விட்ட அவர்களுக்கு இந்தச் சமுதாயம் விழிகளாக இருக்க முடியாவிட்டாலும்கூட, வழித் துணையாக இருப்போம். அவ்வாறு இருந்தால் நம் மனதுக்கு நிம்மதியும், நிறைவும், மகிழ்ச்சியும் கிட்டும்; நாம் வாழ்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கும்.
ஆண்டுதோறும் நம் நாட்டில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 95 லட்சம் முதல் ஒரு கோடி ஆகும். ஆகவே மரணிப்பவர்கள் ஒவ்வொருவரின் கண்ணையும் தானமாக வழங்கினால் பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பார்வை பெறுவது நிச்சயம்.
விழியற்றோர் இருளில் வாழ வேண்டாமே. அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களின் திறமைக்கு சிறகுகள் தருவோம். தடைகளற்ற பாதைகளை அமைத்துத் தருவோம். அன்பும், மரியாதையும், சம உரிமையும் நிறைந்த உலகில் அவர்கள் வாழ வகை செய்வோம். நாம் அவர்களின் ஊன்றுகோலாய், விழியாய் இருப்போம். வாழும் நாளில் கருணையைப் பொழிந்த நம் கண்களுக்கு, நாம் மறையும்போது, இன்னொரு உடலைப் பரிசளித்துச் செல்வோம்!.