முகப்பு

ஒளியின் பரிணாம வளர்ச்சி

ஒளியைக் காணும்போது நம் மனதுக்குள் மகிழ்ச்சி, உற்சாகம், விழிப்பு, நம்பிக்கை, புத்துணர்வு, ஆற்றல் ஆகியன உருவாகின்றன.

22 வினாடிகள் முன்பு
ஒளியின் பரிணாம வளர்ச்சி
பகிர்:

ஒளியைக் காணும்போது நம் மனதுக்குள் மகிழ்ச்சி, உற்சாகம், விழிப்பு, நம்பிக்கை, புத்துணர்வு, ஆற்றல் ஆகியன உருவாகின்றன. தெய்வீக அருள், அறிவு, சுத்தம், இருளை வெல்லும் நன்மை எனப் பலவற்றுக்காக வணங்கித் துதிக்கப்படுகிறது ஒளி . இந்து சமயத்தில் தீபம் ஏற்றுதல், அக்னி வழிபாடு, சூரிய வழிபாடு ஆகியன பிரதானம். இருளை நீக்கும் ஒளியின் திருவிழாவாக தீபாவளி, தமிழ்நாட்டில் கார்த்திகை தீப வழிபாடு எனத் தொன்றுதொட்டு உள்ளது.

புத்தம், சமணம், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என உலகம் முழுவதும் ஒளியை ஞான சொரூபமாகவும், இறை அம்சமாகவும் வணங்கி வழிபட்டு வருகின்றனர். பார்சி, சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பழங்குடிகள் என அனைவரும் ஒளியை விழா எடுத்துக் கொண்டாடிவருகின்றனர். எகிப்து, கிரேக்க, ரோமன் பழைமையான வழிபாடுகள் ஒளியை மையப்படுத்தியே உள்ளன. திருமுருகாற்றுப்படை காலத்திலேயே தமிழர்கள் முருகன், சிவன், சக்தி போன்ற கடவுளை ஜோதி வடிவில் வணங்கி வந்துள்ளனர்.

ஒளியில் ஒளிந்திருக்கும் அறிவியல்

Advertisement

Advertisement

பெருநெருப்பின் வெடிப்புதான் இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள சூரிய மண்டலங்களையும் உருவாக்கியுள்ளது. அந்த நெருப்பு இன்னும் நம் பூமியின் மையப் பகுதியில் தீப்பிழம்பாக இருந்து வருகிறது. மனிதன் நெருப்பைக் கண்டறிந்தான் என்கிறோம். ஆனால், அதற்கு முன்பாகவே நெருப்பு இருந்தது. மனிதன் தனது தேவைக்காக தேவைப்படும் நேரத்தில் எப்படி நெருப்பைக் கொண்டுவருவது என்கிற எளிய முறையைக் கண்டறிந்தான்.

ஒளியும் வெப்பமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பிறப்பதாகத் தோன்றினாலும், ஒளி சென்று சேரும் தொலைவை வெப்பம் சென்று சேர இயலாது. ஒளி, பிரபஞ்சங்களைக் கடந்து அண்டங்களில் பயணிக்கும் அற்புதப் பேராற்றல். ஒளியை நமக்கு அடையாளம் காட்டும் உதவியை இருள் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது.

'இருளில் அசையாமல் கிடக்கும் ஒரு பொருள், ஒளி அதன் மீது பட்டதும் இயங்கும் பொருளாக மாறி விடுகிறது அல்லது சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் மீது ஒளி பட்டவுடன் அதன் இயங்கும் வேகம் அதிகமாகி விடுகிறது' என்பதைச் சென்ற நூற்றாண்டில் ஹைசன்பர்க் என்கிற அறிஞர் அறிவியல் கோட்பாடாக முன்மொழிந்தார்.

பாரதத்தின் பாரம்பரியத்தின் அடிப்படையில் இதை சிவமாகவும் சக்தியாகவும்கூட கருதலாம். சலனமின்றி அழிவின்றி அமைதியுற்றிருக்கும் சிவத்தை அசைவிக்கும் மூலம்தான் சக்தி. இந்தக் கொள்கையோடு ஒப்பிட்டால் முற்றிலும் இயக்கமற்ற ஒரு பொருள் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை; முழு வேகத்தையும் எட்டி இயங்கும் ஒரு பொருள் இருப்பதாகவும் தெரியவில்லை. இங்கே, காண்பவரின் நிலையைப் பொறுத்தே அதன் இயக்க நிலையையும் ஓய்வு நிலையும் அறியப்படுகிறது. மனிதனால் உணர முடியாத ஓய்வுநிலையும் ஒரு பொருளுக்கு இருக்கலாம், மனிதனால் கணக்கிட முடியாத குறைந்தபட்ச அல்லது அதிவேக இயக்க நிலையும் ஒரு பொருளுக்கு இருக்கலாம். ஒரு பொருள் நம் கண்களுக்குப் புலப்படுவதற்கு அதன் மீது குறிப்பிட்ட அளவு ஒளி விழ வேண்டியுள்ளது.

பகலில் சூரியனிலிருந்து பூமியை வந்தடையும் புற ஊதாக் கதிர்கள் நம்மைச் சுற்றிலும் நிரம்பியுள்ளன. இந்த புற ஊதாக் கதிர்களோ அல்லது செயற்கை ஒளி விளக்குகள் மூலம் நாம் உருவாக்கும் கட்புலனாகும் ஒளியோ ஒரு பொருளின் மீது பட்டு அது மீண்டு வந்து நம் விழித்திரையை அடையும்போதுதான் அந்தப் பொருளின் அளவு, வடிவம், நிறம் ஆகியவற்றை நம்மால் காணமுடிகிறது. ஒளி என்பது ஒரு பொருளை அடையாளம் காண்பதற்கு மட்டும் பயன்படவில்லை; அதன் ஆற்றலைப் பொறுத்து பருப்பொருள்களின் சக்தி நிலையை அதிகரிக்கச் செய்கிறது.

ஒளிவிளக்கின் வளர்ச்சி

இயற்கை முறையில் மரம், தாவர பாகங்கள், விலங்கு கொழுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி நெருப்பு முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு விலங்கு, தாவர எண்ணெய்களைப் பயன்படுத்திய எண்ணெய் விளக்குகள் வீடுகள், மதச் சடங்குகள், பயணங்களில் உபயோகப்படுத்தப்பட்டது. விலங்கு கொழுப்பு, மெழுகு, பாரஃபின் மெழுகு ஆகியவற்றைக் கொண்டு மெழுகுவர்த்திகள் உருவாக்கப்பட்டன. இவை எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் இருந்ததால் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. பின்பு, அதிக பிரகாசம், சுத்தமான ஒளி கொண்ட மண்ணெண்ணெய் விளக்குகள் நீண்ட நேர வேலை செய்ய வழிவகுத்தது.

எரிவாயு விளக்குகள் வருகைக்குப் பின்னர் தெரு விளக்குகளின் பயன்பாடு தொடங்கியது. தாமஸ் எடிசனின் புரட்சிகர கண்டுபிடிப்பான மின்சாரத்தில் ஒளிரும் இழை மின்விளக்கு மாபெரும் மாற்றத்தை உலகம் முழுவதும் கொண்டுவந்தது. இது நம்பகமானதாக இருந்ததால், ஒளி பாய்ச்சுவதில் ஈடு இணையற்று விளங்கியது. பின்னர் அவை ஒளிரும் குழாய் விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள், சிறிய ஒளிரும் விளக்குகள், ஒளி உமிழும் டையோடுகள், ஒ.எல்.இ.டி., மேம்பட்ட எல்.இ.டி. தொழில்நுட்பங்கள், லேசர் ஒளியமைப்பு, குவாண்டம் டாட் தொழில்நுட்பம், பெரோவ்ஸ்கைட் எல்.இ.டி. ஐ.ஒ.டி. , செயற்கை நுண்ணறிவு உடன் ஒருங்கிணைப்பு எனப் பல பரிமாணங்களைக் கடந்து வளர்ந்துவருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களால் இயங்குதல், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது, அதிக பிரகாசம், வெண்மையான ஒளி, மிக உயர்ந்த செயல்திறன், நீண்ட ஆயுட்காலம் ஆகியவை முக்கிய தேவையாக உள்ளன.

எத்தனை விளக்குகள் தொழில்நுட்ப ரீதியில் வந்தாலும், வீட்டில் பூஜை அறையில் நாம் ஏற்றும் அகல் தீபம் நம் துன்பங்கள் அகலவும், இன்பங்கள் தொடரவும் ஆதாரப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. தீபச் சுடரை இரு கண்களால் நோக்கி புருவ நடுவில் பொருத்தி நமக்குப் பிடித்த இறையை எண்ணி மனத்தினால் வணங்கும்போது, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும்படியான புத்துணர்ச்சி வருகிறது; புதிய ஒளியில் நமக்கான புதிய வழி பிறக்கிறது. ஒளியை ஆராதிப்போம் !

- முனைவர் பா.சக்திவேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.