நடுவெழுத்து அலங்காரம் எனும் சித்திரகவி
சித்திரகவிகள் என்பன ஒரு புலவரின் செய்யுள் யாப்புத் திறமையை உலகத்தோர்க்குக் காட்டுவன.
சித்திரகவிகள் என்பன ஒரு புலவரின் செய்யுள் யாப்புத் திறமையை உலகத்தோர்க்குக் காட்டுவன.
பல புலவர் பெருமக்கள் இவற்றில் சிறந்து விளங்கி செய்யுள்களை இவ்வகையில் இயற்றி தமிழுக்கு அழகும் பெருமையும் சுவையும் சேர்த்தனர். பலவகைப்பட்ட, நூற்றுக்கணக்கான சித்திர கவிகளில் நடுவெழுத்து அலங்காரம் என்பது ஒன்றாகும்.
ஒரு செய்யுளில் பாடப்படுகிற பொருள்களை, மூன்றெழுத்துக் கொண்ட பரியாயச் சொற்களால் குறிப்பிட்டு, அவற்றின்
Advertisement
Advertisement
நடுவெழுத்துகளை முறையே தொகுப்பின், வேறொரு பொருள் தரும் வகையில் பாடப்படுவது நடுவெழுத்து அலங்காரம் எனப்படும்.
மற்றும் ஏனைய எழுத்துகளும் வேறு பொருள்களைத் தரும் வகையில் அமைக்கப்படும்.
காளமேகப் புலவர் இயற்றியுள்ள ஒரு பாடலைக் காண்போம்.
திருமால்வா கனநாவா யிராசி யொன்று
சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமிவ் வேழின்
உருவாமே ழெழுத்தினடு வெனக்குச் செய்தான்
உகந்துபதி நான்கினையும் தானே கொண்டான்
ஒருபாகத் திருத்தினான் கையில் ஏற்றான்
ஒருமதலை தனக்களித்தான் உண்டான் பூண்டான்
பரிவாயொண் கரத்தமைத்தான் உகந்தான் இந்தப்
பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் தானே.
திருமால் வாகனம் = நா(கா)ரி ளகருடன்ன
நாவாய் = க(ல)ம்
இராசி ஒன்று= க(ன்)னி
சினை= க(வ)டு
தெவிட்டார்= ஆ(ரா)ர்
மாதுலன்= மா(ம)ன்
கோகிலம்= ப(ல்)லி
இச்சொற்களின் நடுவெழுத்துகள் சேர்ந்து 'காலன் வராமல்' எனும் தொடரைக் காட்டுகின்றன. 'எனக்குக் காலன் வராமல் செய்தான்' என்பது இதன் பொருளாகும்.
இவ்வேழு சொற்களின் முதலிலும் முடிவிலும் உள்ள 14 எழுத்துகளைச் சேர்த்தால் முறையே நாரி, கம், கனி, ஆடு, ஆர், மான், பலி எனும் சொற்களைப் பெறலாம்.
இவற்றைச் செய்யுளின் 5 - 8 அடிகளில் உள்ள சொற்களுடன் பொருத்திப் பொருள் கொண்டால், நாரி - பெண்ணை ஒரு பாகத்தில் இருத்தினான்; கம் - கபாலத்தைக் கையில் ஏற்றான்; கனி - பழத்தைத் தன் குழந்தையான விநாயகனுக்கு அளித்தான்; கடு - ஆலால விடத்தை உண்டான்; ஆர் - ஆத்திமாலையை அணிந்தான்; மான் - மானைக் கரத்தில் ஏந்தினான்; பலி - பலியினை உகந்தான் எனக் கூட்டிப் பொருள் கொண்டால், மற்ற (முதலும் முடிவுமான) 14 எழுத்துகளைத் தானே ஏற்றுக் கொண்டான், யார் அவன்? அவனே பைம்பொழில் தில்லையுள் ஆடும் பரமனாகிய சிவபிரான் என்பது அழகுற விளங்குகிறது.
இதே போன்ற புளியங்குடி முத்துவீரக் கவிராயரின் தனிப்பாடல் ஒன்றும் நடுவெழுத்து அலங்காரமாக அமைந்து தமிழுக்குச் சுவை கூட்டுகிறது.
திருமகளோர் திசைக்கிறைவன் வன்மீன் சொல்லி
திகழரசன் மாதிவற்றின் பிரதி நாம
மருவுநடு எழுத்தாறும் சேர்த்துப் பார்த்து
மன்னுநின்பேர் வாசிமற்றப் பன்னி ரண்டில்
இருமையினும் பயன்நல்க விசாரி தேடு
இருபுயத்தில் சூடுதெய்வ மந்தி ரத்தை
அருமையுடன் புனையருந்து கவிஞர்க் கெல்லாம்
அன்னையென வரும்தென்னாட்டு அரசர் ஏறே.
திருமகள்= க(ம)லை
ஓர் திசைக்கு இறைவன்= நி(ரு)தி (தென்மேற்குத் திசைக்குக் காவலன்)
வன்மீன்= மு(த)லை
சொல்லி= செ(ப்)பி
திகழ் அரசன்= பூ(ப)தி
மாது க(ன்)னி
இதில் கிடைக்கும் நடுவெழுத்துச் சொல் மருதப்பன். நடுவெழுத்துகள் அல்லாது முதல், கடைசி எழுத்துகளைச் சேர்த்தால் முறையே கலை, நிதி, முலை, செபி, பூதி, கனி எனும் சொற்கள் கிட்டும். ஆக, பாடலின் பொருள்: திருமகள், ஓர் திசைக்கு இறைவன், வன்மீன், சொல்லி, திகழ் அரசன், மாது இவற்றின் பிரதிப் பெயர்களின் நடு எழுத்தைச் சேர்த்து மருதப்பன் எனும் உன் பெயரை வாசி. மற்றப் பன்னிரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் (முதல், கடை) கிடைக்கும் சொற்களான: கலை - கல்வி கற்றால் இம்மை, மறுமை இரண்டிலும் பயன் பெறலாம்; நிதி - உலக வாழ்க்கைக்கு செல்வம் தேவை; முலை - இல்லற வாழ்வில் சிறப்பாக வாழ்; செபி - இறைவன் நாமத்தைச் செபி; பூதி - திருநீற்றை என்றும் அணியவும்; கனி - கனிகளை உண்டு வாழ்.
உறையூர் பெரியசாமிப் பிள்ளையவர்கள் இயற்றியுள்ள ஸ்ரீ செளந்தரநாயகிப் பதிகத்தில் கடைசிப் பாடலானது நடுவெழுத்து அலங்காரமாக அமைந்துள்ளது எனக் காணலாம்.
சிரம்பரிதூது நூறு கைதொன்மை திறல்கன
மென்னுமோ ரெட்டுத்
தரம்பெறு மொழியினடு வமையெழுத்தாற் சமைந்திடு
திருப்பெயர் தரித்தே
நிரந்தரமா யெவ்விடத் தினுமிருக்கு நிலையின
ளெனினுந் தனினைப்பா
கரந்தை வெம்பவ நோயகற் றிடக்கருவூ
ரமர்ந்தொளி ரன்னைதாள் பணிவாம்
சிரம்= கே(ச)ம்
பரி= இ(வு)ளி
தூது= ச(ந்)து
நூறு= ச(த)ம்
கை= க(ர)ம்
தொன்மை= அ(நா)தி
திறல்= செ(ய)ம்
கனம்= மு(கி)ல்
இவ்வேழு சொற்களின் நடுவெழுத்துகள் கூடி 'சவுந்தரநாயகி' எனும் பெயரைக் காட்டியுள்ளதனைக் காணலாம்.
இவ்வகைப்பட்ட பாடல்கள் சிலவற்றில் தொடர்ந்துவரும் சொற்களின் நடுவெழுத்துக்களைக் கூட்டியமைத்தால் ஒரு குறள் வெண்பாவினைக்கூடப் பெறவியலும்.
இத்தகைய சித்திரகவிகளும் அவற்றை இயற்றியுள்ள புலவர்களும் தமிழுக்குப் பெருமையும் புகழும் அழகும் சேர்த்தனர் என்பது மிகையன்று.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.