உங்களுக்குள் இருக்கும் திறனை நம்புங்கள்!
'பேச்சிப்பாறையில் காணி பழங்குடியினர், குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் ஆண்டு முழுவதும் கடுமையாக உழைப்பார்கள்.
'பேச்சிப்பாறையில் காணி பழங்குடியினர், குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் ஆண்டு முழுவதும் கடுமையாக உழைப்பார்கள். நிறைய விளைபொருள்களை உற்பத்தி செய்வார்கள். ஆனால், சரியான விற்பனை விவரங்கள் தெரியாமல், வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களும் நல்ல லாபத்தைப் பெற உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் நான் தொழில் முனைவு வழிகாட்டலில் ஈடுபட்டதற்கு முக்கியக் காரணம்' என்கிறார் முனைவர் மினிப்பிரியா இராஜேந்திரன்.
அவர் உளவியல் ஆலோசகர், தன்னம்பிக்கைக் கருத்தாளர், உயிர்த் தொழில்நுட்பத் துறையின் உதவிப் பேராசிரியர், தொழில் முனைவோர், சமூகப் பணியாளர் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட குழித்துறைப் பகுதியைச் சேர்ந்த மினிப்பிரியா ராஜேந்திரனிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'நான் தாவரவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ளேன். 16 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டேன். மலங்கரா கத்தோலிக்கக் கல்லூரியில் உயிர்த்தொழில்நுட்பத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, மாணவர்கள் பலரிடம் திறமை இருந்தும், சரியான வழிகாட்டுதல், வாய்ப்புகள் இல்லாததைப் பார்த்தேன். அதேபோல் பெண்கள், இளைஞர்கள், கிராமப்புறங்களில் உழைக்கும் பலரிடம் திறமை இருந்தும் சந்தை, திட்டமிடல், தொழில் வளர்ச்சி குறித்த அறிவு அவர்களிடம் குறைவாக இருப்பதைக் கவனித்தேன். அதனால் கல்வியையும், அனுபவத்தையும் சமூகப் பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
உங்களை நம்புங்கள்
உளவியல், வாழ்வியல் வழிகாட்டுதல் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியம், உளவியல் துறையிலும் செயல்படத் தொடங்கினேன். ஒரு பயிற்சி முடிந்தவுடனோ அல்லது உளவியல் ஆலோசனை முடிந்தவுடனோ கிடைக்கும் பாராட்டைவிட, பல ஆண்டுகளுக்குப் பிறகும் என்னைத் தொடர்புகொண்டு, 'அன்று நீங்கள் சொன்ன ஒரு கருத்து என் வாழ்க்கையை மாற்றியது' என்று சொல்வதுதான் சிறந்தது. நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதல்ல. உங்களை, உங்களுக்குள் இருக்கும் திறனை நம்புங்கள். ரியாலிட்டியை ஏற்றுக்கொள்ளுங்கள். பண்பட்டு, பக்குவமாக வாழத் தொடங்குங்கள் என்றே கூறுகிறேன்.
வானமே எல்லை
பெண்கள் தங்களுடைய திறமையை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகப் பணி எனத் தங்களுக்கு விருப்பமுள்ள எந்தத் துறையிலும் தங்களுடைய பங்களிப்பை உருவாக்க வேண்டும். சமூகப் பணி என்பது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதோடு முடிந்துவிடுவது அல்ல.
ஒரு மாணவருக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவது, ஒரு பெண்ணுக்குத் தொழில் தொடங்க உதவுவது, இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்பு வாய்ப்பை உருவாக்குவது, பொதுமக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டுப் புரிந்துகொள்வது போன்ற அனைத்தும் சமூகப் பங்களிப்பின் பகுதிகள்தான்.
பெண்களுக்கு பொது வாழ்க்கை என்பது பதவியை நோக்கிய பயணமாக மட்டும் இருக்கக் கூடாது. முதலில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களின் தேவைகளைக் கேட்க வேண்டும்; சமூகத்தில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான தீர்வுகளில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். ஒரு பெண் தனக்காக முன்னேறுவது ஒரு சாதனை, தனது வளர்ச்சியை சமூகத்தின் முன்னேற்றத்துடன் இணைப்பது அதைவிடப் பெரிய பொறுப்பு.
சமூக மாற்றம்
தொழில் முனைவில் மிகப்பெரிய சவால் தொடர்ந்து கற்றுக்கொள்வதும், மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதும்தான். குறிப்பாக, ஒரு பெண்ணாக பல துறைகளில் செயல்படும்போது குடும்பம், தொழில், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தி வெற்றி பெற வேண்டியது பெரிய சவாலாக இருந்தது. அதையும் தாண்டித்தான் என்னால் சாதிக்க முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமை, ஆர்வம், பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவு மிகவும் முக்கியம். ஆனால், அறிவு மட்டும் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்குப் போதுமானதல்ல. குறிப்பாக ஒரு தொழில் வளரும் போது, அனைத்தையும் தனியாகச் செய்ய முடியாது. சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் தலைமைத்துவத்தின் ஒரு பகுதிதான்.
ஒரு தொழில் தொடங்குவது என்பது வெறும் முதலீட்டைப் பெறுவது அல்ல. அது ஒரு யோசனையை அடையாளம் காண்பது, அதைத் திட்டமாக மாற்றுவது, சந்தையைப் புரிந்துகொள்வது, நிதி ஆதாரங்களைத் தேடுவது, தோல்விகளை எதிர்கொள்வது என நீண்டப் பயணம். எனக்கு தொழில்முனைவு என்பது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; ஒருவருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுப்பதும், அவரால் இன்னும் சிலருக்கு வேலைவாய்ப்பு உருவாகுவதும் ஆகும். இதை ஒரு சமூக மாற்றமாகவே பார்க்கிறேன்.
நாம் பொதுவெளியில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒருவருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் வெறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். கேட்பவரின் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலையையும் புரிந்துகொண்டு, அவரால் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய எண்ணங்களை உருவாக்க வேண்டும்' என்றார் மினிப் பிரியா இராஜேந்திரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.