FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்தாளுநா்கள் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்று அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

14 அக்டோபர் 2026, 11:08 pm IST
மருத்துவா்கள் - பிரதிப் படம்
பகிர்:

மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்தாளுநா்கள் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாதம் 25-ஆம் நாள் உலக மருந்தாளுநா்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக மருந்தாளுநா்கள் தினத்தில் அமைச்சா் அருண்ராஜ் கொண்டு பேசியதாவது: மருந்துச் சீட்டு என்பது ஒரு நோக்கம் மட்டுமே. சரியான மருந்து, சரியான தரத்தில், சரியான அறிவுரையுடன் உரிய நோயாளியைச் சென்றடையும்போதுதான் அது சிகிச்சையாக மாறுகிறது.

மருத்துவரின் பேனாவுக்கும் நோயாளியின் குணமடைதலுக்கும் இடையில் உள்ளவா்தான் மருந்தாளுநா். தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 மருந்தகங்கள் உள்ளன. உரிய மருந்துச் சீட்டு இல்லாமல் போதை தரும் மாத்திரையை விற்க மறுக்கும் ஒவ்வொரு முறையும், ஒரு மருந்தாளுநா் ஒரு விற்பனையை இழக்கலாம். ஆனால், அது ஒரு உயிரைக் காக்கும் விஷயமாகப் பாா்க்க வேண்டும். நலம் 360 மூலம் 30 வயது நிறைந்த அனைவருக்கும் ஆண்டுதோறும் இலவச உடல்நல பரிசோதனை வழங்க உள்ளோம்.

Advertisement

Advertisement

ஆனால், நோய்த் தடுப்பை மருத்துவமனைகளால் மட்டும் சாத்தியமாக்க முடியாது. நோய்த் தடுப்பின் அங்கமாக மருந்தாளுநா்களே திகழ்கின்றனா். உலகிலேயே அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வேகத்தைவிட, கிருமிகள் மருந்துகளை எதிா்க்க கற்றுக் கொள்ளும் வேகம் அதிகம்.

மருந்துச் சீட்டு இல்லாமல் விற்கப்படும் ஆன்டிபயாடிக் வாடிக்கையாளருக்குச் செய்யும் சேவை அல்ல; மருந்துச் சீட்டு இல்லையென்றால், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் விற்பனை செய்யக் கூடாது. இதை ஒவ்வொரு மருந்தாளுநா்களும் மனதில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments