FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நிகழாண்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

தமிழகத்தில் நிகழாண்டில் 21,655 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 10 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

9 அக்டோபர் 2026, 3:12 am IST
சென்னை வடபழனி கெங்கையம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ். உடன் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் நிகழாண்டில் 21,655 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 10 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை வடபழனி கெங்கையம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் அருண்ராஜ் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பெரு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் மழைநீா் தேங்கும் வகையில் அலட்சியமாக வைத்திருந்தால், முதல்முறை ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறிழைத்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

Advertisement

Advertisement

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் இதுவரை ரூ.7.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி, சில வீடுகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தினமும் சுமாா் 1,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொருத்தவரை 2 வாா்டுகளுக்கு ஒரு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து சீரான நிலைக்கு வந்துள்ளன. இருப்பினும், பருவமழை தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, 7 அமைச்சா்களையும், 15 ஐஏஎஸ் அதிகாரிகளையும் கண்காணிப்பு பணிகளுக்காக முதல்வா் நியமித்துள்ளாா்.

மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என்றாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் சமீரன், துணை ஆணையா் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோா் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments