முகப்பு

வரலாற்றில் ஏரி பராமரிப்பு!

நாட்டின் வளமைக்கு ஆதாரம் நீர் வளம்தான். 'நீரின்றி அமையாது உலகு' என்று நீர் வளத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார் திருவள்ளுவர்.

16 வினாடிகள் முன்பு
வரலாற்றில் ஏரி பராமரிப்பு!
பகிர்:

நாட்டின் வளமைக்கு ஆதாரம் நீர் வளம்தான். 'நீரின்றி அமையாது உலகு' என்று நீர் வளத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார் திருவள்ளுவர். மனித வரலாற்றில் ஆறுகளும், ஏரிகளும் முக்கிய இடம்பெற்று விளங்கின. ஆறுகளின் கரைகளிலும், இயற்கையாய் அமைந்த ஏரிகளின் அருகேயும் மக்கள் தங்கி, குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வேளாண்மையை மேற்கொண்டனர் என்பதற்கான தொன்மைச் சான்றுகள் உள்ளன.

தடாகம்

பல்லவ மன்னர்கள் காலத்தில் ஏரிகள் 'தடாகங்கள்' என்று அழைக்கப்பட்டன. காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் என்ற ஊரில் உள்ள ஏரி 'பரமேசுவர தடாகம்', களக்காட்டூர் ஏரி 'சந்திர மேகத்தடாகம்', வாலாஜாபாத் அருகில் உள்ள தென்னேரி 'பிரளயத் தடாகம்', 'தாதா சமுத்திரம்' , உத்திரமேரூர் ஏரி 'வைரமேகத்தடாகம்', மாமண்டூர் அருகில் உள்ள ஏரி 'சித்திர மேகத்தடாகம்', மகேந்திரவாடி ஏரி 'மகேந்திரத் தடாகம்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஏழு கண் மடை

ஏரிகள் நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளை (கண்மாய் - ஊருணி - ஏந்தல்) போற்றிப் பராமரிக்கப்பட்ட அரிய வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. பாண்டிய நாட்டிலும் பல ஏரிகள் பராமரிக்கப்பட்டன.

ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப பாண்டியனின் (கி.பி. 815-862) காலத்தில் அதிகாரியான எட்டிச்சாத்தன் என்பவர் சாத்தூர் தென்மேலி, இருக்கன்குடி ஆகிய ஊர்களில், ஏரிகளைச் சீரமைக்கப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவிளாகம் அருகே அமைந்துள்ள கண்மாய்

'ஸ்ரீ பராங்குசப் பேரேரி' எனக் குறிக்கப்படுகிறது. முற்காலப் பாண்டிய மன்னனாகிய அரிகேசரி பராங்குச மாறவர்மனுடைய நின்ற சீர் நெடுமாறன் (கி.பி 624-672) பெயரால் அழைக்கப்பட்ட இந்த ஏரியிலிருந்து தூம்பு வழியாக வரும் நீர் 'ஏழு கண் மடை' என்ற வட்டவடிவ அமைப்புடன் விளங்கும் மடை வழியாகச் சென்று பாசனம் நடைபெறுவது பாண்டிய நாட்டின் நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மன்னர்களின் பெயர்களால் நீர்ஆதாரங்கள்

மன்னர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் புதிய ஊர்களை அமைக்கும்போது, ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை அமைத்து வேளாண்மைக்குப் பெரிதும் உதவினர். திருச்சி அருகே ஆலம்பாக்கத்தில் இருந்த ஏரி 'மதுராந்தகபேரேரி' என அழைக்கப்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள 'வீராணம் ஏரி' என்ற வீரநாராயணன் ஏரி முதலாம் பராந்தக சோழனால் அமைக்கப்பட்டது.

திண்டிவனம் அருகேயுள்ள உலகாபுரத்தில் உள்ள கண்டராதித்த பேரேரி, திருமழபாடி அருகே உள்ள செம்பியன்

மாதேவிப் பேரேரி, பிரமதேசம் என்ற ஊரில் உள்ள சுந்தரசோழ பேரேரி - குந்தவைப் பேரேரி, புதுச்சேரி அருகே திரிபுவனியில் உள்ள மதுராந்தக பேரேரி, முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கை கொண்ட சோழ

புரத்தில் அமைக்கப்பட்ட 'சோழகங்கம்' என்ற பொன்னேரி போன்ற பல ஏரிகள் சோழ மன்னர்களால் அமைக்கப்பட்டன.

ஆறுகளிலிருந்து வாய்க்கால்கள் தோண்டப்பட்டு ஏரியில் நீர் நிரப்பப்பட்டது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்திலிருந்து நீர் செல்ல 'வடவாறு' அமைக்கப்பட்டது. ஏரியிலிருந்து நீர் செல்வதற்கும், முறைப்படுத்துவதற்கும் மடை, மதகு, தூம்பு, குமிழி, கலிங்கு போன்ற அமைப்புகள் பெரிதும் உதவின.

கல்வெட்டு

மதகுகள்

மடை, மதகு என்பது தடையில்லாது நீர் வெளியேறும் அமைப்பாகும். இதனை பராமரித்தல் 'மடை

கோலுதல்' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, மதகு பலகையால் செய்யப்பட்டிருக்கும். நீண்ட குழாய் போன்ற அமைப்பில் நீர் மறைந்து உட்சென்று மீண்டும் வெளிப்படும். இந்த அமைப்புக்கு தூம்பு என்று பெயர். பெட்டி போன்று அமைந்த அமைப்பில் துளை வழியே சுழன்று கீழ் சென்று எழுந்து வெளிச் செல்லும் அமைப்புடன் மேலிருந்து நீர் கீழே இறங்குவதால், தண்ணீரில் காற்று குமிழியாக வெளிவரும். இதுவே குமிழியாகும்.

கலிங்கு என்பது ஏரியின் கரை மட்டத்துக்குச் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை அமைப்பினால் ஏரியில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும். ஏரியின் கரைக்கும் பாதுகாப்பாக அமையும். ஏரியின் அடிப்பகுதியில் தங்கும் சேறு வெளியேற 'சேற்றோடி' என்ற அமைப்பு உள்ளதையும் காணலாம்.

குமிழி, தூம்பு போன்ற அமைப்புகளை செய்து கொடுத்ததைப்பற்றி பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. திருமழபாடி அருகே இருந்த செம்பியன் மாதேவி பேரேரியில் இருந்த தூம்பு 'இராஜராஜன்' எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் ஏரியில் காணப்படும் குமிழியில் 'சோழப்பெருந்தேவி' என்ற பெயர் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏரி வாரியம்

ஏரிகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஏரி வாரியம், ஏரிவாரிய பெருமக்கள் போன்ற அமைப்புகள் இருந்தன என்பதை காவேரிப்பாக்கம், திருப்பாற்

கடல், உக்கல், உத்திரமேரூர் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. தூம்பு, மதகு போன்ற பாசன அமைப்புகளைப் பராமரிக்கும் வகையில், 'கலிங்கு வாரியம்' என்ற நிர்வாக அமைப்பு இருந்தது.

ஏரியைப் பாதுகாக்க வழங்கப்பட்ட நிலம் 'ஏரிப்பட்டி' எனவும், குளங்களைப் பாதுகாக்க அளிக்கப்பட்ட நிலம் 'குளப்பட்டி' எனவும், 'குளப்புறம்' எனவும் அழைக்கப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி ஆயம், நீர்விலை, ஏரிக்காடி போன்ற வரிகளும் விதிக்கப்பட்டன. ஏரி தொடர்பாக ஏரிக்காசு, ஏரியமஞ்சி, ஏரிவாய்ப்பாடிக்காவல், ஏரி நீர்க்கோவை போன்ற வருவாய்ச் சொற்களும், சோழர்கால கல்வெட்டுகளில் காணக் கிடக்கின்றன.

ஏரிகளைப் பராமரிக்க 'ஏரி வாரியம்' என்ற அமைப்பு இருந்தது. ஏரியில் மண் மேடிட்டதை அவ்வப்பொழுது அகற்றி ஆழப்படுத்தினர். இதனை 'குழி குத்துதல்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூரில் உள்ள 'வைர மேகத்தடாகம்' என்ற ஏரியை பல்லவ மன்னன் கம்பவர்மன் (கி.பி. 868-900) காலத்தில் பலமுறை தூர் எடுத்து ஆழப்படுத்தி போற்றிப் பராமரித்தனர்.

மடவிளாகம்

தூரெடுத்து ஆழப்படுத்துதல்

ஏரிகள் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டன. கரையும் பலப்படுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், நங்கவரம் என்ற ஊரில் இருந்த குளத்தில், அடியில் படியும் வண்டல் மண்ணை ஓடத்தில் சென்று கூடையில் எடுத்துக் குளத்தை ஆழமாக்க, கொடும்பாளூரைச் சேர்ந்த ஒருவன் தானமளித்தான். நாள்தோறும் ஆறு பேர் இந்தப் பணியை செய்து வந்ததும், இவர்களுக்கு கூலியாக நெல் அளிக்கப்பட்டதும் கல்வெட்டு மூலம் அறிகிறோம். புதுச்சேரியில் உள்ள பாகூர் ஏரி ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்ட முறையை முதலாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது.

ஏரிக்கரை பராமரித்தல்

சமயபுரம் அருகே தேவிமங்கலம் அக்கரைப்பட்டியில் ஏரிக்கரை பற்றி கல்வெட்டு கூறுகிறது. இங்குள்ள சோழனின் கீழ் ஆட்சி செய்த குலோத்துங்கசோழவானவதரையர் என்ற குறுநில மன்னன் இந்த ஏரியை வெட்டியதும், இவன் பாண்டியன் தலைகொண்ட வாணவதரையன் என்ற பட்டபெயரைப் பெற்றதும், ஏரி காலப்போக்கில் உடைந்ததும், அதை தியாக வினோதவேளாண் என்பவன் சரிசெய்து, கரையை உயர்த்தி அஞ்சாத 'பெருமாள் ஏரிக்கரை' எனப் பெயரிட்டுள்ளதும் கல்வெட்டில் தெரியவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலத்தில் உள்ள ஏரியில் கரை உடைந்ததுடன் மடைகளும் அழிந்து விட்டன. இதைப் பழுதுபார்க்க ஊர்சபை 40 பழங்காசுகளை அளித்தது. இதைக் கொண்டு ஆண்டுதோறும் கரையைப் பராமரிக்க வேண்டும் என்றும், கரையை சீரமைக்க கரைக்கு அருகாமையில் மண் எடுக்காமல் தொலைவிலிருந்து மண் கொண்டு வந்து பராமரிக்க வேண்டும் என்றும் 'கரைக்குப் புறவாலே கல்லிக் கரை செய்யக் கடவோமாகவும்' என்ற கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஏரிகளிலிருந்து மீன் பிடித்தலால் வரும் வருவாயும், ஏரிகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதை 'பாசிப்பாட்டம்' எனக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

திருச்சி அருகே வடசேரி என்ற ஊரில் உள்ள குளக்கரையில் உள்ள ராஜராஜசோழன் கல்வெட்டில், 'வீரசோழ பேரரையன் என்பவனால் இக்குளம் அமைக்கப்பட்டது' என்றும், இறுதியில் 'இந்தக் குளம் அழிச்சான் பாவம் கொள்வான்' என்ற எச்சரிக்கையும் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

-கி. ஸ்ரீதரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.