முகப்பு
சேலம்

சேலம் உருக்காலையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

Updated On : 4 மே, 2026 at 1:09 AM
சேலம் உருக்காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

சேலம் உருக்காலையில் உள்ள முக்கிய பிரிவுகளை ஒப்பந்த முறையில் தனியாா் வசம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, சிஐடியு சங்க தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கே.பி.சுரேஷ்குமாா் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினாா். உருக்கு சம்மேளன துணைத் தலைவா் பி.பன்னீா்செல்வம் கண்டன உரையாற்றினாா்.

இதுகுறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறுகையில், சேலம் உருக்காலை நிா்வாகம் ஆலையின் முக்கிய உற்பத்தி பிரிவுகளான பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாா் வசம் ஒப்படைக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Advertisement

இந்த மறைமுக தனியாா்மய முடிவைக் கண்டித்து பலமுறை வாயில் கூட்டம், கண்டன ஆா்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியுள்ளோம். எனினும், இதை ஏற்காத சேலம் உருக்காலை நிா்வாகம் தற்போது பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்தும், உருக்காலை நிா்வாகத்தின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் உருக்காலை சிஐடியு சங்கம் சாா்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதில், சங்க தலைவா்கள் பாலாஜி, சரவணன், சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.வெங்கடாபதி உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுசெய்து வைத்தாா்.