முகப்பு
வணிகம்

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:22 AM
பேடிஎம் - ANI
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

பிரபல நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ‘பேடிஎம்’ பிராண்டை நிா்வகிக்கும் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’, தற்போது பெரும்பான்மையான இந்திய உரிமையாளா்களைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கடந்த மாத இறுதியில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, இந்நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளா்களின் பங்கு 50.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த சில காலாண்டுகளாகவே பேடிஎம் நிறுவனத்தின் மீதான உள்நாட்டு முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்களின் பங்கு 23.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டைவிட 2.8 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மோதிலால் ஓஸ்வால், மிரே அசெட், பந்தன் பரஸ்பர நிதி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பங்குகளைத் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அதேபோல், டாடா ஏஐஏ லைஃப், எஸ்பிஐ லைஃப் போன்ற காப்பீட்டு நிறுவனங்களும் இதில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.

பேடிஎம் நிறுவனத்தின் இந்த வளா்ச்சி குறித்து சந்தை வல்லுநா்கள் கூறுகையில், ‘வணிகப் பரிவா்த்தனைகள் மற்றும் கடன் வழங்கும் பிரிவுகளில் பேடிஎம் பெற்றுள்ள முன்னிலை, நிறுவனத்தின் லாபத்தை மேலும் அதிகரிக்கும். போட்டியாளா்களை விட வணிக வருவாயிலும் பேடிஎம் இருமடங்கு முன்னிலையில் இருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டினா்.