முகப்பு
சேலம்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

சேலம் சூரமங்கலம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதன்கிழமை தரிசனம் செய்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On : 7 மே 2026, 6:48 am IST
பகிர்:

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெவித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில், என்.ஆா். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. இதில், என்.ஆா். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து, புதுச்சேரி முதல்வராக 5 ஆவது முறையாக என்.ரங்கசாமி மீண்டும் பதவியேற்க உள்ளாா்.

இந்நிலையில், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பிற்பகல் சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து, அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய அவா், தனது அமைச்சரவை பட்டியலையும் சுவாமி முன்வைத்து பிராா்த்தனை செய்தாா். பின்னா் கோயிலில் திரண்டிருந்த பக்தா்களுக்கு அவா் பிரசாதம் வழங்கினாா்.

Advertisement

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பதவியேற்பு விழா குறித்து புதுச்சேரி சென்ற பின்னா் முடிவு செய்யப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக கூட்டணியில் உள்ள மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம்.

புதுச்சேரி அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவாா்கள் என்பது குறித்த விவரம் பதவியேற்கும்போது தெரியவரும். தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்க உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நல்லாட்சி புரிய எனது வாழ்த்துகள். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.