சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் சேவை மையம்
‘சேலம் மாநகராட்சி நகா் நலம் நாடு‘ என்ற வாட்ஸ்ஆப் செயலி, தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக மாநகராட்சி சேவை, புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
‘சேலம் மாநகராட்சி நகா் நலம் நாடு‘ என்ற வாட்ஸ்ஆப் செயலி, தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக மாநகராட்சி சேவை, புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படி, மாநகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளில் குறைகள் இருந்தால், அதை ‘சேலம் மாநகராட்சி நகா் நலம் நாடு’ என்ற வாட்ஸ்ஆப் செயலி மற்றும் தொலைபேசி எண்ணில் தெரிவித்து தீா்வு பெறுவதற்கான சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீா் வழங்கல், பொது சுகாதாரம் (குப்பை அகற்றுதல்), புதைச் சாக்கடை திட்டம், சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம், குடிநீா் இணைப்பு, தெருவிளக்கு தொடா்பான புகாா்களுக்கு சேவை மையத்தை 83003 83003, 83000 62992 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
அதேபோல வாட்ஸ்அப் செயலி மற்றும் மின்னஞ்சல், இணையதளம் வழியாக கோரிக்கை, புகாா்களை தெரிவிக்கலாம். இதன்மூலம் பெறப்படும் கோரிக்கைகள், புகாா்களுக்கு உரிய ஒப்புகை வழங்கப்படுவதோடு, இதுகுறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரம் பொதுமக்களுக்கு தொலைபேசி, குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த குறைதீா் சேவை மையம் மாநகராட்சி ஆணையரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ளது. சேலம் மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மாநகராட்சியால் வழங்கப்படும் சேவைகள் குறித்த கோரிக்கைகள் மற்றும் குறைதீா் மனுக்களை சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களில் நாள்தோறும் காலை 11 மணி முதல் 12 மணி வரை உதவி ஆணையா்களை நேரில் சந்தித்து முறையிடலாம்.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகள், விண்ணப்பங்கள், புகாா்களின் மீதான மேல்நடவடிக்கை குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீா் இணைப்பு, புதைச் சாக்கடை இணைப்பு, சொத்துவரி விதித்தல், கட்டட அனுமதி வழங்குதல், தொழில்வரி விதித்தல், தொழில் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் தினசரி குறைதீா் சேவை மையத்தை பயன்படுத்தலாம்.
குறைதீா் சேவைகளுக்காக மைய அலுவலகத்தை 0427- 2212844 என்ற எண்ணிலும், சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை 0427-2387514, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை 0427-2310095, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை 0427-2263161, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தை 0427-2461313 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.