மாநிலம் முழுவதும் அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு 5 கோடி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி மும்முரம்
மதுரை, ஏப். 20: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே கிடைக்கும்படி தபால் துறை மூலம் பள்ளிகளுக்கு
மதுரை, ஏப். 20: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே கிடைக்கும்படி தபால் துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் பணி மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஏப்.30}ம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12}ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் தேதிக்குப் பிறகே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிளைகள் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பொறுப்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பெரும்பாலான மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் கிடைத்தபோதிலும் சில இடங்களில் சில பாடங்களுக்குரிய புத்தகங்கள் கிடைத்தும், சில புத்தகங்கள் கிடைக்காமலும் போனதாகப் புகார்கள் வந்தன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் பள்ளிகளைச் சென்று அடையாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதனால், முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கப்படும் ஜூன் மாதத்திற்கு முன்பாக அந்தந்தப் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் தபால் துறை மூலம் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், மாணவர்களின் தேவைக்கு ஏற்பவும் பண்டல்களாகக் கட்டப்பட்டு தபால் துறை வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இப்பணியை மாநில பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், அஞ்சல் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த 4 வாரங்களாகப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று அரசுப் பள்ளிகளிலும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது.
7 முதல் 10}ம் வகுப்பு மற்றும் 12}ம் வகுப்பு வரை ஏற்கெனவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும், தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 மற்றும் 6}ம் வகுப்புக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால் அதற்கான பாடப்புத்தகங்கள் மே மாதம் வழங்கப்பட உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக 1}ம் வகுப்புக்கு சுமார் 10 லட்சம் புத்தகங்கள் என்று கணக்கிட்டால் 10}ம் வகுப்பு வரை ஒரு கோடி புத்தகங்கள் என்ற அளவில் ஒரு வகுப்புக்கு 5 பாடங்கள் வீதம் சுமார் 5 கோடி புத்தகங்கள் வரை வழங்கப்பட உள்ளன.
பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடும் நேரத்தில் மாணவர்களுக்குப் புத்தகங்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனால், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் நாளில் மாணவர்கள் புத்தகத்துடன் பள்ளிக்கு வருவார்கள் என்றார் அவர்.
மதுரை மாவட்டத்தில் 400 டன்கள் என்ற இலக்கில் இதுவரை 313 டன்கள் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிவகங்கையில் 225 டன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.