மதுரை

ராஜாஜி மருத்துவமனைக்குத் தேவையான 114 மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி

மதுரை, டிச. 13:    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தேவையான 114 மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ளது. ஆனால், முறையான பயிற்சி பெற்றவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் பணியிடம

ஜெயப்பாண்டி

மதுரை, டிச. 13:    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தேவையான 114 மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ளது. ஆனால், முறையான பயிற்சி பெற்றவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் பணியிடம் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

  இம்மருத்துவமனை தென் தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாகத் திகழ்கிறது. தினமும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக 2600 பேர் வரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 இந்த மருத்துவமனையில் எம்.என்.ஏ. எனப்படும் மருத்துவ உதவியாளர்கள் பெரும்பாலானோர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், அந்த இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. தற்போது மருத்துவமனையில் 15 மருத்துவ உதவியாளர்களே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதுபோன்ற பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து அளிப்பது, எலும்பு முறிவு போன்ற சிகிச்சைக்கான துணிக்கட்டுகள் கட்டுவது உள்ளிட்ட சிகிச்சைகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

  மேலும், அண்ணா பஸ் நிலையப் பகுதியில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் காயச் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கும் புதிய டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்தே புதிய சிகிச்சைப் பிரிவுக்கு ஆள்கள் தேர்வுசெய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி விரிவாக்கக் கட்டடங்களுக்கான எம்.என்.ஏ.க்களும் தேவைப்படுவதால், கூடுதல் எம்.என்.ஏ.க்கள் நியமனத்துக்கு சுகாதாரத் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

 தற்போது அந்த இடங்களுக்கான ஆள்களைத் தேர்வு செய்து நியமிக்க சுகாதாரத் துறையும் அனுமதித்து விட்டது. இதற்கான ஆள்கள் பட்டியலை அனுப்பிவைக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மதுரை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும் எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 ஆனால், மருத்துவ உதவியாளர் பயிற்சி பெற்றவர்கள் 50 பேர் மட்டுமே, மதுரை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, மருத்துவமனைக்கு தேவையான மீதி 64 பேருடன் பெயரை அனுப்புவதற்கு ஆள்களே இல்லை என்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், பத்தாம் வகுப்பு படித்த மருத்துவ உதவியாளர் பயிற்சியே இல்லாதவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், இதுபோன்ற தேர்வு சரியல்ல என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு கடந்த ஆண்டு, அரசு மருத்துவமனையில் ஆள்கள் தேர்வு நடந்தது. அப்போது ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் குறிப்பிட்டவர்களை மட்டுமே மாநில சுகாதாரத் துறைக்கு அனுப்பி தேர்வு செய்து மருத்துவமனையில் நியமித்துள்ளனர்.

 ஆனால், மருத்துவ உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பித்தும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏராளமாக உள்ளனர். அதுபோன்றவர்களை காலிப்பணியிடத்துக்கு நியமிக்கலாம் என்பதும் மருத்துவமனையில் உள்ள ஊழியர் சங்கத்தினரின் கருத்தாகும்.

  மேலும், புதிதாக அண்ணா பஸ் நிலையத்தில் அமையும் விரிவாக்கக் கட்டடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுவதால் அங்கு குறைந்தது 80 மருத்துவர்கள், 160 செவிலியர்கள், 35 மருத்துவ உதவியாளர்கள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தாற்காலிகமாக மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தவும் சுகாதாரத்துறை விவரங்களைக் கோரியிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT