ஆதரவற்ற நிலையில் பளியர் இன மக்கள்
பழனி, ஜூன் 1: பழனி அருகே மின் வசதி, வீடு இன்றி பாறைகளில் வசிக்கும் பளியர் இன மக்கள், தங்களுக்கு வழிகாட்டுவோர் இன்றி தவித்து வருகின்றனர். பழனியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புளியமரத்துசெ
பழனி, ஜூன் 1: பழனி அருகே மின் வசதி, வீடு இன்றி பாறைகளில் வசிக்கும் பளியர் இன மக்கள், தங்களுக்கு வழிகாட்டுவோர் இன்றி தவித்து வருகின்றனர்.
பழனியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புளியமரத்துசெட். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. ஒற்றையடிப்பாதையில் பயணித்தால், யானைகள் உலாவும் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கற்றாழைபாறை எனப்படும் குட்டிக்கரட்டில், சுமார் 15 பளியர் குடும்பங்கள் ஆதரவின்றி வாழ்ந்து வருகின்றனர். குன்றின் மேல் தென்னங்கீற்றால் கொட்டகை அமைத்து, வசித்து வருகின்றனர். அருகிலேயே மின் கம்பம் இருந்தும் இங்கு மின்சாரம் கிடையாது.
இங்குள்ளவர்கள் முந்தைய காலங்களில் காட்டுக்கு சென்று கிழங்கு, தேன் சேகரித்து வந்துள்ளனர். தற்போது வனத்துறையின் கெடுபிடியால் அவர்கள் காட்டுக்குள் செல்ல முடியாத நிலையில் அருகிலுள்ள காடு, தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். அங்கும் இவர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு தினமும் சுமார் 50 ரூபாய்தான் வருமானம் வருகிறது. அதுவும் மாதத்துக்கு சிலநாள்கள் தான் வேலை. பலரும் பட்டினியால் வாடுவது சாதாரணமாம்.
குத்தகை ஆடுகளை மேய்க்கும் இவர்களுக்கு கூலியாக, ஆடு குட்டி போடும்போது குட்டி தருவார்கள் என்பது புதிதாக இருந்தது.
இவர்களில் செல்வி என்ற பெண் கூறியது:
வேலைக்குச் செல்லும் இடங்களில் நாங்கள் கொத்தடிமைகளாக இருக்கிறோம். வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதாக கூறினால், மிரட்டி அடிக்கின்றனர்.
சூரியன் மறையத் துவங்கினால் ஐயப்பன் (யானை) வந்து விடுகிறது. ஆகவே யாரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றார்.
முருகன் என்பவர் கூறுகையில், மிகவும் குறைந்த கூலியே கிடைக்கிறது; பலமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமும், நேரிலும் கோரிக்கை விடுத்தும் யாரும் கவனிப்பது இல்லை என தெரிவித்தார்.
சாப்புளி என்பவர் கூறும்போது, எங்களுக்கு இதுவரை ரேஷன் கார்டு கிடையாது. வாக்காளர் அடையாள அட்டை கிடையாது. தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்றது இல்லை. எந்த எழுத்துபூர்வமான ஆதாரமும் இல்லை. எனக்கும் குழந்தைகளுக்கும் என்ன வயதாகிறது எனவும் தெரியாது என்றார்.
இவர்களுக்கு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து ஆரோக்கியா அகம் என்ற காப்பகத்தின் பஞ்சாயத்துராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் கடந்த மாதம் ஆடைகளை வழங்கியிருக்கிறார்.
பழனிக்கு அருகில் இருந்தும் நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஆதிவாசிகள் போல வாழும் குட்டிக்கரடு பளியர்கள், தங்களுக்கு தங்க இடமும், அரசு சலுகைகள் பெற ரேஷன் கார்டும் வழங்கி, கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மாவட்ட நிர்வாகம் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.