மதுரை, ஏப். 19: பதவி உயர்வின்போது போலீஸாருக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், இதனால், பல ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களைவிட, பின்னால் சேர்ந்தவர்கள் அதிக ஊதியம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
போலீஸாருக்கு பத்து ஆண்டுகள் முடிந்ததும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இப்படி பதவி உயர்வு வழங்கப்படும்போது இரண்டு ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதாவது, பத்தாண்டு பணி முடிக்கும் போலீஸாருக்கு கிரேடு 2 என்ற பதவி உயர்வு வழங்கப்படும். இப்பதவி உயர்வு பெற்றவர்கள் கையில் இரு கோடுகள் அணிந்துகொள்வர். அப்படி பதவி உயர்வு அளிக்கும்போது, கிரேடு 2-க்கு என ஓர் ஊதிய உயர்வும், பத்தாண்டு பணி முடித்ததற்காக, ஓர் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் ரூ. 600 முதல் ரூ. 800 வரை கூடுதலாக வழங்கப்படும் என்கிறார்கள் போலீஸார்.
இந்நிலையில் கடந்த 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டில் போலீஸ் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் கிரேடு 2 பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு ஊதிய உயர்வுதான் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது 1997 மற்றும் 1999-ல் பணியில் சேர்ந்தவர்கள் இப்போது ரூ. 8,170 அடிப்படை ஊதியமாக, இதர படிகளைச் சேர்த்து சுமார் ரூ.16,000 -க்கும் மேலாக ஊதியம் பெறுகிறார்கள்.
ஆனால், கடந்த 2000-வது ஆண்டில் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள், கிரேடு 2 நிலை பதவி உயர்வை சில மாதங்களுக்கு முன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு விதிமுறைப்படி இரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அனைவரும் இப்போது அடிப்படை ஊதியமாக ரூ.8,370 பெறுவதாகவும் தெரிகிறது.
அதாவது பாரபட்சமான இந்த ஊதிய உயர்வால் கடந்த 1997 மற்றும் 1999-ல் போலீஸ் பணியில் சேர்ந்தவர்களைவிட கடந்த 2000-வது ஆண்டில் பணியில் சேர்ந்த
போலீஸ்காரர்கள் கூடுதலாக ஊதியம் பெறுவதாகவும் பாதிக்கப்பட்ட போலீஸார் கூறுகின்றனர். இந்த ஊதிய முரண்பாடுகளால், மதுரை நகரில் மட்டும் சுமார் 450 போலீஸார் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட போலீஸார் கூறுகையில், அமைச்சுப் பணியாளர்கள் எங்களது ஊதிய உயர்வுக்கான ஆவணங்களைச் சரியாகக் கையாளவில்லை. இதனால், எங்களுக்குப் பிறகு போலீஸாகப் பணியில் சேர்ந்தவர்கள் இரு ஊதிய உயர்வைப் பெற்று, எங்களைவிட அதிகமாகவே ஊதியம் பெறுகின்றனர். இதை உடனடியாகச் சரிசெய்ய உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.
மதுரையில் மட்டுமல்லாது மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் இதுபோல ஊதிய உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை போலீஸாருக்கு ஊதிய உயர்வில் பாரபட்சம் உள்ளது குறித்து மாநகர் போலீஸ் கமிஷனர் பி. கண்ணப்பனிடம் கேட்டபோது, எனது கவனத்துக்கு இப்பிரச்னை வரவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை எடுத்து ஊதிய உயர்வு கிடைக்கச் செய்வேன். எந்தக் குறை இருந்தாலும் போலீஸார் தயங்காமல் என்னிடம் முறையிடலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.