மதுரை

அரசு மருத்துவமனையில் சுகாதாரச்சீர்கேடு!

மதுரை, ஜூன் 6: பினாயில் வாங்குவது நிறுத்தப்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கழிப்பறைகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சுமார் 2600 உள்நோயாளி

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 6: பினாயில் வாங்குவது நிறுத்தப்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கழிப்பறைகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் சுமார் 2600 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக 70 வார்டுகள் உள்ளன. 16 அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன. உள் நோயாளிகளுக்காக 120-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளன. தினமும் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வெளிநோயாளிகள் வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனையில் 220 சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர். அப்போது வார்டுகளும் குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது 120 நிரந்தர சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 50 பேர் ஆண்கள். 70 பேர் பெண்கள். இவர்களைத் தவிர, 15 பேர் தினக்கூலி அடிப்படையில் சுகாதாரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்களில் பெண்கள் செவிலியர் பிரிவின் கீழும், ஆண்கள் சுகாதார ஆய்வாளர்களது கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களைக் கண்காணிக்க உறைவிட மருத்துவர் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையின் விரிவாக்கக் கட்டடமான, அண்ணா பஸ் நிலைய பகுதியில் உள்ள கட்டடத்தையும் ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சுகாதார பணியாளர்களே கவனிக்கும் நிலை உள்ளது.

சுகாதாரப் பணிக்கு இன்னும் 85 பேர் வரை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், தற்போதைய பணியாளர்களில் 15-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள், மருத்துவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேறு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத நிலையில், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சாதனங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சுகாதாரத்தை மேம்படுத்தும் அடிப்படை பொருள்களான விளக்குமாறு, மூங்கில் தப்பை உள்ளிட்டவை இல்லாத நிலையே நீடிக்கிறது. அத்துடன் கழிப்பறைகளைச் சுத்தமாகக் கழுவிட பினாயில் அல்லது லைசால் எனும் திரவம் அவசியம். ஆனால்,கடந்த 3 மாதங்களாக, பினாயில் வாங்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

தற்போது மருத்துவமனைக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் நீர் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், அந்த நீரை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. இதற்குக் காரணம் கழிப்பறைகளின் கோப்பை, நீர் குழாய்கள் பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனை கழிப்பறைகளை பராமரிப்பு எனும் பெயரில், எச்ஐவி பாதித்தவர்களுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நோயாளிகளிடமிருந்து ரூ.3 முதல் ரூ.5 வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இதில் பாதி கட்டணத்தொகை மருத்துவமனை நிர்வாகம் பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டது.

மீதித் தொகை பராமரிப்பு எனும் பெயரில், சிலரால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் அன்சுல்மிஸ்ராவிடம் கழிப்பறை பராமரிப்பு கட்டண வசூல் குறித்து நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பராமரிப்பு எனும் பெயரில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கத் தடை வித்துள்ளார். இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

அதே சமயத்தில், பல கழிப்பறைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆகவே மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளை நிர்வாகமே பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கெனவே, மருத்துவமனை சுகாதாரத்தை மேம்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில், இங்குள்ள சுகாதார ஆய்வாளர்களை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றுப்பணியாக அனுப்பியிருப்பதாகவும் மருத்துவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

யாருக்குப் பொறுப்பு?

அரசு மருத்துவமனையில் வார்டுகளில் ஒட்டடை அடிப்பது, நோயாளிகள் வண்டி தள்ளுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் சார்ஜென்ட் கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், அவர்கள் அப்பணியை மேற்கொள்வதில்லை எனவும், நோயாளிகளிடம் அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொண்டு அதிகாரம் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆகவே, பணியாளர்களில், யாருக்கு எந்தப் பொறுப்பு என சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கையை மேற்கொள்வதும் அவசியம் என்பதும் பொதுமக்களின் கருத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT