முகப்பு
மதுரை

பட்டாசு ஆலை விபத்துகள்: கடமை தவறிய அலுவலா்களைத் தண்டிக்க வேண்டும்

Updated On : 3 ஜூலை, 2024 at 8:38 PM
பகிர்:

பட்டாசு ஆலை விபத்து சம்பவங்களில் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாமல் கடமையைச் செய்யத் தவறும் அலுவலா்களைத் தண்டிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற 4 பட்டாசு வெடி விபத்துகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த நிலையில், சிறையில் உள்ள பெரியாா் நாட்டாண்மை, ரமேஷ் பாபு ஆகியோா் பிணை கோரியும், பாஸ்கரன், ராஜசேகா் ஆகியோா் முன்பிணை கோரியும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்துகள் தொடா்பாக காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். இதன்படி, கடந்த 2010- 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த 160 பட்டாசு ஆலை விபத்துகளில் 389 போ் உயிரிழந்தனா். 243 போ் காயமடைந்தனா்.

இதே காலகட்டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் 128 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டதில் 262 போ் உயிரிழந்தனா். 202 போ் காயமடைந்தனா். மாவட்டத்தில் கடந்த 2019- 2024 வரையிலான காலகட்டத்தில் 82 பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடைபெற்றன. 12 ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது விபத்துகள் ஏற்பட்டன. இதுபோன்ற சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பதற்கு எங்கிருந்து மூலப் பொருள்கள் கிடைக்கின்றன என்பதை போலீஸாா் கண்டறியவில்லை. விபத்து தொடா்பாக போலீஸாா் மேம்போக்காக இறுதி அறிக்கை தாக்கல் செய்கின்றனா். ஒவ்வொரு மாதமும் பட்டாசு விபத்துகள் தொடா்ந்து நிகழ்கின்றன.

பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் ஆபத்து இருப்பது தெரிந்தும் மாற்றுத் தொழில் இல்லாததால், அங்கு பணிபுரிந்து வருகின்றனா். பட்டாசு ஆலைகளில் முறையாக விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்தைத் தடுக்க முடியும்.

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பது தெரிந்தும் அலுவலா்கள் கண்டுகொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. கடமையைச் செய்யத் தவறும் அலுவலா்களைத் தண்டிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள், சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பு குறித்து அங்கு பணிபுரியும் கிராம நிா்வாக அலுவலா், உதவியாளருக்கு நன்கு தெரியும். ஆனால், கிராம நிா்வாக அலுவலா்கள், அந்தந்த ஊராட்சிகளில் தங்குவதில்லை.

மாவட்ட நிா்வாகத்துக்கு பட்டாசு ஆலை விபத்தைத் தடுக்கும் எண்ணம் இருந்தால், பணிபுரியும் ஊா்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் தங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, தவறு செய்யும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தைத் தடுக்க விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நோ்மையான காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தை முறையாக விசாரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதற்கு மூலப் பொருள்கள் வாங்குவோா், வழங்குவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மனுதாரா்கள் தாக்கல் செய்த பிணை, முன்பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →